வெற்றியின் அளவுகோல் வருமான வரி!

12. மலர்களும், தேனியும்!

‘ஒரு ரூபா.. ஒரே ஒரு ரூபா.. யாரேனும் கேட்ட உடனே குடுத்துவாங்களா…?

சொந்த மாமன் மச்சான் கூட இந்தக் காலத்துல எதுவும் செய்யறது இல்லை….. அப்புறம் எப்படி மத்தவங்களைக் குறை சொல்லலாம்…?’

இது நாம் அடிக்கடி கேள்விப் படுகிற வசனம். நாமே கூட பல முறை சொல்லி இருப்போம்.

‘உடல் உழைப்பு வேணுமா…. சொல்லுங்க. என்னால முடிஞ்சதை செய்யறேன். ஆனா…, பணம் வேணும்னு மட்டும் கேட்காதீங்க… என்னால எதுவும் தர முடியாது…’

எல்லா இடங்களிலும் அநேகமாக எல்லாரும் இப்படித்தான் இருக்கிறார்கள். நன்கு தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் கேட்டாலே தர மறுக்கிற நாம்,

ஏதோ ஒரு சட்டத்தை சொல்லி, இவ்வளவு பணம் கட்டு என்று சொன்னால், உடனே ஏற்றுக் கொண்டு விடவா போகிறோம்…?

தான் ‘கஷ்டப் பட்டு’ சம்பாதித்ததை யாராவது பங்கு போட வேண்டி வந்தால், கசப்பாகத்தானே இருக்கும்…? வருமான வரி வசூலிப்பதில் மிகப் பெரும் தடையாக, சவாலாக இருப்பதே, மக்களின் இந்த மன நிலைதான்.

‘வேறு யாருக்கோ’ தருகிறோம் என்கிற எண்ணமே தவறானது. நாம் தருகிற வரிப் பணம் மீண்டும் மக்கள் நலத் திட்டம், கட்டுமானப் பணிகள் என்று, வேறு ஏதோ ஒரு வடிவத்தில் நமக்கே திரும்ப வரப் போகிறது என்கிற உண்மை புரியாததால் வருகிற குழப்பம் இது.

எல்லாம் இருக்கட்டும். வீட்டு வரி, தண்ணீர் வரி போன்ற வரிகளையே குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முறையாகச் செலுத்துகிற வழக்கத்தையே இன்னமும் பலரால் நடைமுறைக்குக் கொண்டு வர முடியவில்லையே… பிறகு எப்படி வருமான வரியில் மட்டும் இதனை எதிர்பார்க்கலாம்…?

வருமான வரி வசூலிப்பதில் வரித் துறைக்கு உள்ள மிகப் பெரிய சிக்கலே, வருமானத்தை அடையாளம் காண்பதுதான்.

வருமான வரி என்பது, தனி நபர் சார்ந்த வரி. அந்தத் தனி நபர், தன்னுடைய வருமானம் இதுதான் என்று நேர்மை யாகக் கணக்கில் காட்டி விட்டால், அந்தத் தனி நபர் உட்பட, யாருக்கும் எந்தப் பிரசினையும் இல்லை. ஆனால் அவ்வாறு கணக்கில் காட்டாது மறைக்கப் படுகிற வருமானத்தை வெளிக் கொண்டு வருவதுதான் துறையின் மிக முக்கிய பணியாக இருந்து வருகிறது.

குறைத்துக் காட்டுதல் அல்லது முழுவதுமாக மறைத்து விடுதலில் இருந்து எப்படி வெளியில் வருவது..? உண்மை யான வருமானத்தின் மீதான முழு வரியையும் எப்படி வசூலிப்பது…? முற்றிலுமாக, நூற்றுக்கு நூறு வசூலிக்க, உத்தரவாதமான வழி இல்லை என்றாலும் கூட, சில வழிமுறைகள் உள்ளன. இயன்றவரை வருமான வரி வசூலித்து விடலாம்.

இவ்வழிகளில் ஒன்றுதான் – டி.டி.எஸ். (T.D.S.). அதாவது, ‘மூலத்தில் வரி பிடித்தம்’. எங்கே, எந்தப் புள்ளியில், யாரிடம் இருந்து வருமானம் வருகிறதோ, அங்கேயே வரி வசூலித்து விடுவதுதான் இந்த வழிமுறை.

யாருக்கு வருமானம் வருகிறதோ, அவர்தானே வருமான வரி செலுத்த வேண்டும்..? மாறாக, யார் மூலம் வருமானம் வருகிறதோ, அதாவது, யார் பணம் தருகிறார்களோ, அவரே வருமான வரியைப் பிடித்தம் செய்து கொண்டு, மீதிப் பணத்தை மட்டுமே வழங்குவார்.

வரிப் பிடித்தம் செய்தவர் அதனை, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், அரசுக் கணக்கில் செலுத்தி விடுவார்.

இது, யாரிடம் இருந்து பணம் பிடித்தம் செய்யப் பட்டதோ, அவருடைய கணக்கில் சென்று சேரும்.

சம்பளதாரர்கள் தொடங்கி ஒப்பந்தப் பணி செய்பவர்கள் வரை அத்தனை பேரும் இதன் கீழ் வந்து விடுகிறார்கள். மாத சம்பளம் பெறுகிற ஒருவருக்கு, சம்பளம் தருகிற ‘முதலாளி’, வருமான வரியைப் பிடித்துக் கொண்டு விடுவார். அவரே, சம்பந்தப்பட்ட ஊழியரின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) குறிப்பிட்டு, வங்கி மூலம் அரசுக்கு செலுத்தி விடுவார்.

ஒப்பந்த அடிப்படையில் பணி (contract work) மேற்கொள்வோர் விஷயத்தில், யார் ஒப்பந்தப் பணிக்கான ஊதியம் தருகிறாரோ அவர், வரிப் பிடித்தம் செய்து மீதப் பணத்தையே ஒப்பந்தத் தொகையாக வழங்குவார்.

வரிப் பிடித்தம் செய்தவர், முறையாக வங்கியில் வரி செலுத்தியதற்கான நிரூபணமாக, படிவம் 16 தருவார். இதை வைத்துக் கொண்டு, வரி செலுத்தியவர், தன்னுடைய வருமான வரிப் படிவம் (‘ரிடர்ன்’) தாக்கல் செய்யலாம். மிகை யாக வரிப் பிடித்தம் செய்யப் பட்டு இருந்தால், மிகைப் பணத்தை வரித் துறையிடம் இருந்து, வட்டியுடன் திரும்பப் பெறலாம். (பிரிவு 244ஏ)

முன் வரி (‘அட்வான்ஸ் டேக்ஸ்’) என்கிற முறையும் ஏறத்தாழ இப்படிப் பட்டதுதான். இது ஆனால், சம்பந்தப்பட்ட தனி நபர், தானாகவே செலுத்துகிற வரி.

டி.டி.எஸ். மற்றும் முன் வரி மூலமே, கணிசமான வரித் தொகை வசூலிக்கப் படுகிறது. தானாக முன் வந்து செலுத்தப் படுகிற இந்த வரி, சட்டத்தின் செயல்பாடுகள் மூலம் வந்து சேருகிறது.

ஆனால், வரித் துறையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் மூலம் கிடைக்கிற தொகைதான் மிக முக்கியமானது. அரசுக் கருவூலத்துக்கு ‘வலு’ சேர்ப்பது இந்தப் பகுதிதான். மேலும், கணக்கில் காட்டப்படாத (கருப்பு) பணம் மிகுந்து விடாமல், ஆரோக்கியமான பொருளாதாரத்தை உறுதி செய்வதும் இதன் மூலம்தான்.

இதுதான் உண்மையிலேயே மிகக் கடினமான பணி.

என்னதான் சட்டங்களும் விதிமுறைகளும் இவை தருகிற அதிகாரங்களும் இருந்தாலும், கூடவே பல்வேறு வரைமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கவே செய்கின்றன.

‘மலரில் இருந்து வண்டு, தேனை உறிஞ்சுவது போல, வரி செலுத்துவோரிடம் இருந்து வரி வசூலிக்க வேண்டும்’ என்று கௌடில்யர் (சாணக்கியர்) சொன்ன அறிவுரையைத்தான், வழிகாட்டு நெறிமுறையாகக் கொண்டு இந்திய வரித் துறை செயல் படுகிறது.

வரி செலுத்துவோருக்கு ‘வலி’ ஏற்படாதவாறு, குறைந்த பட்ச அசௌகர்யமே தருகிற விதத்தில், மிகவும் பொறுப்புணர்வுடன் நாசூக்காக வரி வசூலிக்க வேண்டும். இது விஷயத்தில், இந்திய  வருமான வரித் துறை, உலகத்துக்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.

அது எப்படி…?

( தொடரும்…)