வெ.அ.வ.வரி-13: நிம்மதி – நம் கையில்! -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வெற்றியின் அளவுகோல் வருமான வரி

13.  நிம்மதி – நம் கையில்!

ந்திய வருமான வரித் துறை. மெய்யாலுமே தொழில்முறை (professionals) நிபுணர்கள் நிரம்பிய அரசுத் துறை. சட்டப் பிரிவுகள், விதி முறைகள் (rules) அவ்வப்போது பிறப்பிக்கப் படும் ஆணைகள், உத்தரவுகள், சுற்றறிக்கைகள் என்று மிகச் சமீபத்திய (latest) நிகழ்வு வரை அனைத்திலும் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள், அனைத்து மட்டங்களிலும் இருப்பதே இத்துறையின் சிறப்பு.

வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்வதில் ஏதும் சந்தேகமா…? ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ரிடர்ன் மூலம் கிடைக்க வேண்டிய உபரித் தொகை (ரிஃபண்ட்) இன்னும் வந்து சேரவில்லையா…?

ஓய்வூதியம் மட்டும்தான், வேறு வருமானம் இல்லை; ஆதலால் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்.) இல்லாமல் ஓய்வூதியத் தொகை பெற என்ன செய்ய வேண்டும்…? ஏதும் வீடு வாங்குவதால் அல்லது விற்பதால் என்ன பாதிப்பு ஏற்படும்…? எத்தனையோ வினாக்கள். விளக்குவதற்கு, உதவுவதற்கு வருமான வரித் துறை தயாராக இருக்கிறது.

பொது மக்களின் நண்பனாய் (people friendly) வரி செலுத்துவோரின் நண்பனாய் (assessee friendly) பணி புரிவதை வருமான வரித் துறை, முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, தவறு இழைத்தவரைக் கண்டுபிடிப்பதும் விடுபட்ட வருமான வரியை வசூலிப்பதும் மட்டுமே துறையின் பணி அல்ல.

ஒவ்வொரு குடிமகனுக்கும், சட்டக் கடப்பாடுகளை (legal obligations) எளிமையாக எடுத்துச் சொல்லி, எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் வரித் துறை முனைப்புடன் செயல்படுகிறது. உண்மைதானா..?

செய்தித் தாள்களை வாசிக்கிற அத்தனை பேருக்கும் ஓர் உண்மை நன்கு புலப்படும். மிக அதிக அளவில் விளம்பரங் களை வெளியிடுகிற துறை என்றால் அது வருமான வரித் துறைதான். ஆண்டுதோறும், நூற்றுக் கணக்கான‘ விளம்பரங்கள். இவை எல்லாமே அநேகமாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிற நோக்கத்தில் வெளியிடப் படுபவைதாம். அல்லது நினைவூட்டல் வகைகளாக இருக்கலாம்.

வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்யக் கூட நேரில் போக வேண்டியது இல்லை. ‘ஆன்லைன்’ மூலம் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் செய்தாயிற்று. . பிறகு…?

ரிடர்ன் மீதான ‘மதிப்பீடு’ (assessment) நிறைவு அடைந்து விட்டால், கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்து விடும். மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப் படும்.

தவிர்க்க இயலாத அதி அவசர அவசியம் இருந்தால் ஒழிய, வருமான வரி அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்லி யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை. எந்த விளக்கம் கோரினாலும், எழுத்து பூர்வமாக, இலச்சினையுடன் கூடிய கடிதம் அல்லது ‘நோட்டிஸ்’ மூலம் மட்டுமே கேட்கப் படுகிறது.

விளக்கங்களை சமர்ப்பிக்க, தேவையான அளவுக்கு கால அவகாசம் தரப் படுகிறது. இதன் பிறகும் கூட, எழுத்து பூர்வமான கடிதம் கொடுத்து, கால நீட்டிப்புப் பெற முடியும். விளக்கம் தர, போதுமான அவகாசம் தராமல் (without giving adequate opportunities of being heard) எந்த வழக்கும் முடிக்கப் படுவதில்லை.

இது போலவே, ‘ரிடர்ன்’ தாக்கல் செய்தல், முன் வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) செலுத்துதல் போன்றவற்றை, அதற்கான கடைசி நாளுக்கு (due date) உள்ளாக செய்து முடிப்பதில் பொது மக்களுக்கு ஏதேனும் இடையூறு இருப்பதாகத் தெரிந்தால், நிறைவு நாளை மாற்றி, கால நீட்டிப்பு செய்ய, வரித் துறை தயங்குவதே இல்லை.

விளக்கம் அளிப்பதில் மொழி ஒரு தடை அல்ல. வாக்குமூலம் உள்ளிட்ட விளக்கங்களை, தத்தம் தாய் மொழியில் வழங்க அனுமதிக்கப் படுகிறது. இதற்கேற்றாற் போல், கேள்விகளும் தாய் மொழியில் எடுத்துச் சொல்லப் படும். ஏற்கனவே பார்த்தது போல, மதிப்பீட்டு ஆணையின் மீது முறையீடு, மறு முறையீடு என்று பல உரிமைகள் உண்டு.

நிர்ணயிக்கப் பட்ட வரித் தொகையை, முன் அனுமதி பெற்று, தவணைகளில் செலுத்தலாம்.

தன்னுடைய வருமான வரிக் கோப்புகளை ஒருவர், இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து வேறு ஓர் இடத்துக்கு, தகுந்த காரணங்களின் மீது, எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், மாற்றிக் கொள்ளலாம்.

திருப்பித் தரப் படுகிற உபரித் தொகையின் மீது வட்டி, ஒவ்வொரு சட்ட நடவடிக்கையையும் செய்து முடிக்க கால வரையறை (time limit), உடனடி சேவையை உறுதி செய்கிற சிறப்பு சேவை மையம் (‘சேவா கேந்திரா’)….. என்று மேலும் மேலும் தன்னை, பொது மக்களின் நம்பத் தகுந்த நண்பனாக நிலை நிறுத்திக் கொண்டு வருகிறது வருமான வரித் துறை.

அரசமைப்புச் சட்டம் மட்டுமல்ல; வருமான வரிச் சட்டமும் கூட, வரி செலுத்துவோரின் உரிமைகளைப் பாதுகாப்ப தில் மிகுந்த அக்கறை செலுத்துகிறது. முறையான ‘நோட்டிஸ்’, ‘சம்மன்’ மூலமாக மட்டுமே, யாரையும் வரவழைக்கவோ, கேள்வி கேட்கவோ, சோதனை இடவோ, சட்டம் அனுமதிக்கிறது.

தனி நபரின் சமய நம்பிக்கைகள், தனி நபர் உரிமைகள் ஆகியவற்றில் வருமான வரிச் சட்டமும், துறையும் ஒரு போதும் தலையிடுவது இல்லை. மிகத் தீவிரமான குற்றம் தவிர்த்து, வரி செலுத்துவோருக்கு எதிராக, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவது இல்லை.

மிகக் குறைந்த ‘அசௌகர்யத்துடன்’ (with least inconvenience) வரி வசூலிப்பதுதான் வருமான வரித் துறையின் செயல் பாணி (work style). அது மட்டுமல்ல; மிரட்டல் (intimidating) தொனியில் பேசுவதும் செயல் படுவதும் அறவே தவிர்க்கப் படுகிறது.

‘file and smile’ என்கிற வாசகத்துக்கு ஏற்ப, இனிமையுடன் பழகுவதும் கனிவுடன் நடந்து கொள்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளதால், பொது மக்கள் எளிதில் அணுக முடிகிற அரசுத் துறைகளில் ஒன்றாக இந்திய வருமான வரித் துறை விளங்குகிறது. இதனாலேயே உலகின் தலை சிறந்த வரி வசூலிப்பாளராகத் தொடர்கிறது.

இத்தனை ‘நல்லவர்களா…?’ ஆம். உண்மை.

இத்துடன் ‘அறிமுகப் படலம்’ நிறைவு பெறுகிறது.

இனி, ‘பாடத்துக்குள்’ (subject) நுழைவோமா…?

– வளரும்…..

கார்ட்டூன் கேலரி