வெற்றியின் அளவுகோல் வருமான வரி….

9. வீடு வாங்கினால் விற்றால் – வரி கூடுமா குறையுமா..?

‘எப்படியாவது…. கடனோ முடனோ பட்டு சின்னதா ஒரு குடிசை வீடாவது வாங்கிடணும்….

அதுதான் என்னோட ஒரே லட்சியம்..’

வெளியில் சொல்லா விட்டாலும், வாடகை வீட்டில் வசிக்கும் அத்தனை பேருக்குள்ளும் இருக்கும் (நியாயமான) ஆசைதான் இது.

வீடு வாங்குவதற்கு வங்கிகளில் கடன் தருகிறார்கள். என்ன ஒன்று… வீட்டு விலையில் கிட்டத்தட்ட பாதிதான் அவர்கள் தருகிறார்கள். மீதித் தொகையை மொத்தமாகத் தருவதற்கு எங்கே போவது…? ஒன்றும் செய்வதற்கு இல்லை.

சிறுகச் சிறுக சேர்த்து வைத்து, குறைந்த பட்ச ‘மார்ஜின்’ தொகையை எட்டிப் பிடித்து விட்டால் போதும்; பிறகு எல்லாம், தானாக நடந்து விடும். ஆமாம்….. நடுத்தர வரக்கப் பிரிவினருக்கு, இது விஷயத்தில் வருமான வரிச் சலுகை ஏதும் உண்டா…?

ஆம். இருக்கிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80C இதற்கு வழி வகுக்கிறது.

வங்கிகள் மூலம் வீட்டுக் கடன் வாங்கி அதனைத் திருப்பிச் செலுத்துகிற போது, ஆண்டுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் வரை வருமானத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம்.

இது கடன் தொகைக்கு மட்டுமே பொருந்தும்; கடன் மீதான வட்டி இதில் அடங்காது. அது மட்டுமல்ல; காப்பீடு (இன்ஷூரன்ஸ்) உள்ளிட்ட பிற செலவுகளும் சேர்த்துதான் 1.50 லட்சம் வரை அனுமதிக்கப் படுகிறது.

சிலருக்கு வாடகை மூலம் வருமானம் வரலாம். இவர்கள் சில செலவுகளை, வாடகை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். வீட்டைப் பழுதுபார்த்தல் (ரிப்பேர்), உள்ளாட்சி வரிகள் (சொத்து வரி / வீட்டு வரி முதலியன) இவை எல்லாம், ‘அனுமதிக்கப்பட்ட செலவுகள்’.

இவை போக மீத இருக்கும் வருமானம்தான் வரிக்கு உள்ளாகும். இப்போது நாம் பார்ப்பது எல்லாம், ஓர் ‘அறிமுகம்’ என்கிற அளவில்தான். விரிவாக, நுணுக்கமாகப் பிறகு பார்ப்போம். எல்லாத் தலைப்புகளிலும் இப்படித்தான்.

சரி. அடுத்த நிலைக்குப் போவோம்.

ஒருவர், தன்னிடம் உள்ள வீட்டை விற்று வேறு ஒன்று வாங்குகிறார். அப்போது…? வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டி வரும்…?

ஒரு சொத்து விற்று அதன் மூலம் வரும் லாபத்தை வருமான வரிச் சட்டம், ‘மூலதன ஆதாயம்’ (capital gain) என்று குறிப்பிடுகிறது. இது, வரிக்கு உட்பட்டதுதான். ஆனால் சலுகைகள் / விலக்குகள் உண்டு.

பிரிவு 45 முதல் 55 வரை, மூலதன ஆதாயம், அதன் மீதான வரி, விலக்கு குறித்து விவாதிக்கப் படுகிறது.

ஒரு வீட்டை விற்றுக் கிடைக்கிற ஆதாயத் தொகையை, பிறிதொரு வீட்டில் முதலீடு செய்தால், இந்த ஆதாயத் தொகைக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை. இதுவே, வீடு அல்லாத, நிலம் உள்ளிட்ட பிற சொத்துகளை விற்பதானால், விற்றுக் கிடைக்கும் மொத்தப் பணத்தையும், மறு முதலீடு செய்தால், வரி விலக்கு பெறலாம்.

ஆமாம்…. மறு முதலீடு செய்வதற்கு கால அவகாசம் எதுவும் சொல்லப் பட்டு இருக்கிறதா..? நிச்சயமாக இருக்கிறது. ஒரு சொத்து விற்று ஆறு மாதங்களுக்கு உள்ளாக வேறு ஒன்றில் மறு முதலீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு இயலாத பட்சத்தில், இத்தொகையை தேசிய மயம் ஆக்கப் பட்ட வங்கியில், மூலதன ஆதாயக் கணக்கில் வைப்பு நிதியாகப் போட்டு வைக்கலாம். அப்போது அதற்கு, வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை.

ஒரு சந்தேகம் வரலாம்.

வாங்கின விலைக்கும் விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம்தானே ‘ஆதாயம்’…?

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருப்போம். இதை எப்படி வாங்கிய விலையாக இப்போது எடுத்துக் கொள்ள முடியும்…?

1977ல் ஒரு லட்சம் என்பதும் 2017ல் ஒரு லட்சம் என்பதும் எப்படி ஒன்றாக முடியும்…?

நியாயமான கேள்வி.

இதற்குத்தான் ‘அடக்க விலைக் குறியீடு’ (cost index) பயன்படுத்தப் படுகிறது. 1977ல் ஒரு லட்சம் என்றால், அதன் இன்றைய மதிப்பு என்னவாக இருக்கலாம் என்பதை, இந்த அட்டவணை மூலம் கண்டு பிடித்து, அந்தத் தொகையை அடக்க விலையாக எடுத்துக் கொள்ளலாம்.

ஓர் ஆண்டின் வருமானம், அதன் மீதான வரி கணக்கிடுவது எப்படி…? என்று விரிவாகத் தனியே காண இருக்கிறோம். அது சமயம், அடக்கவிலைக் குறியீட்டின் படி, மதிப்பு கன்டுபிடிக்கும் முறையை, எடுத்துக் காட்டுகளுடன் பார்க்க லாம்.

இனி, பொதுவாக எல்லா வகை வருமானங்களில் இருந்தும் கழிவுகள், விலக்குகள், சலுகைகள் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்து விட்டால் அத்துடன், ‘அறிமுகப் படலம்’ நிறைவு பெறும். அதன் பிறகு சற்றே ஆழமாக, வரி கணக்கிடும் வழிகளை, முறைகளைத் தொடங்கலாம்.

சென்ற அத்தியாயத்தில் நாம், வருமான வரி கணக்கிடும் போது, 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10% வரி என்று எழுதி இருந்தோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் இது 5%ஆகக் குறைக்கப் பட்டு விட்டது. நடப்பு நிதி ஆண்டில் இருந்து இவ்விகிதம் நடைமுறைக்கு வருகிறது.

சென்ற நிதி ஆண்டுக்கான வருமானத்துக்குத்தான் இப்போது ‘ரிடர்ன்’ தாக்கல் செய்ய இருக்கிறோம் என்பதால், 10% வரி என்று குறிப்பிட்டு இருந்தோம். இது ஒரு நினைவுறுத்தல் மட்டுமே.

ஒரு உண்மையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு வருமான வரிச் சட்டம் கடுமையானது என்று கருதுகிறோமோ, அதே அளவுக்கு அது, சலுகைகளையும் விலக்குகளையும் அள்ளித் தருகிறது.

வருமான வரி அலுவலரின் மதிப்பீட்டு ஆணையின் மீது வரி செலுத்துவோர் முறையீடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இதை எப்படிச் செய்வது….?

(தொடரும்)