மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதாவது, இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் சரிந்த வீடுகளின் விற்பனை, இரண்டாவது காலாண்டில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் நிலவும் சூழலை அடிப்படையாக வைத்து, இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பொது முடக்கம் படிப்படியாக விலக்கி கொள்ளப்படுவது, தேவை அதிகரிப்பு, வீட்டு கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதம், சலுகைகள், தள்ளுபடிகள் ஆகிய அம்சங்கள், விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த வீடு வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருவதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வீடு வாங்குபவர்கள் மத்தியில், மூன்று மற்றும் அதற்குமேல் படுக்கையறைகள் கொண்ட வீடுகள் வாங்குவதும் அதிகரித்துள்ளது.

வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலில், பலரும், அலுவலுக்கான வசதிகொண்ட வீட்டை நாடுகின்றனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், சொந்த நாட்டில் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.