குற்றாலத்தில் தொடரும் இதமான சூழல்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தென்காசியில் குற்றால சீசன் காலம் போல இதமான சூழல் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள குற்றாலத்தில் நேற்று மதியம் வரை வெயிலும், அதன் பிறகு சற்று இதமான சூழலும் நிலவியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழை கொட்டி வருகிறது. தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. சுதந்திர தினமான நேற்று, விடுமுறை நாள் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரம் இருமுறை அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டாலும், அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக திடீர் தடை விதிக்கப்பட்டு, பின்னர் விலக்கப்பட்டும் வருகிறது.

இத்தகைய சூழலில், இன்று காலையில் இருந்து லேசான மேகமூட்டத்துடன் மெல்லிய சாரல் பெய்தது. காலை 9 மணிக்கு பிறகு சாரல் இல்லை. மதியம் 3 மணி வரை வெயில் காணப்பட்டது. அதன் பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. லேசான மேகமூட்டமாக இருந்தது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றால அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது.