லோக்சபா தொகுதிகளை 1,000 ஆக உயர்த்துங்கள்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோரிக்கை

டெல்லி: நாட்டின் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறி இருக்கிறார்.

டெல்லியில் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு சொற்பொழிவில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி ஒட்டு மொத்த மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது.

அதன்பிறகு படிப்படியாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன. தற்போது மக்கள் தொகை இரு மடங்காகிவிட்டது. ஆகையால் தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

ஒரு லோக்சபா உறுப்பினர் 16 முதல் 18 லட்சம் மக்களை பிரதிபலிக்கிறார். அவர்கள் அனைவரையும் அவர் எப்படி அறிந்துகொள்ள முடியும்? நல்லது செய்ய முடியும்?

அதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 650 உறுப்பினர்கள் உள்ளனர். கனடா நாடாளுமன்றத்தில் 443 எம்பிக்கள் உள்ளனர். அப்படி இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் முடியாது?

தேர்தல் நேரங்களில் எண்ணிக்கை தான் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்கும் உரிமையை வழங்குகிறது. மக்கள் பெரும்பான்மை இல்லை என்பதால் உங்களால் பெரும்பான்மை அரசிடம் இருந்து தள்ளி நிற்க முடிகிறது.

அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் சொல்லும் செய்தியின் சாராம்சம் என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.