சென்னை,

மிழகத்தில் பணியாற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மின் வாரிய இயக்குனர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால்,  தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை ஊதிய உயர்வு குறித்து மின்வாரிய குழு தலைவர்  அருள்சாமி தலைமையில், மின் தொடரமைப்பு கழக நிர்வாக இயக்குனர், சண்முகம், மின் திட்ட இயக்குனர், கீதா, மின் பகிர்மான இயக்குனர், ஹெலன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஏற்கனவே  ஊதிய உயர்வு தொடர்பாக, தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுபோல பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மின்வாரிய ஊழியர்களை பதவி நிரந்தரம் குறித்தும் ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

தற்போது தமிழகத்தில்  மின் வாரிய நிதி நிலைமை சீரடைந்து உள்ளதால், அரசுடன் கலந்தாலோசித்து,  மின் வாரிய ஊழியர்களுக்கு   ஊதிய உயர்வு அளிப்பது  தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.