நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த அக்டோபர் மாதத்தில், 0.16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 4.47 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்களின் விலை, 11 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய மாதத்தில், 9.80 சதவீதமாக இருந்தது. அதேசமயம், உணவு அல்லாத பொருட்களின் விலை, அக்டோபர் மாதத்தில், 2.35 சதவீதமாக இருந்தது, நவம்பரில், 1.93 சதவீதமாக குறைந்துள்ளது.

நவம்பரில், தயாரிப்பு பொருட்களின் மொத்த விலை பணவீக்கத்தில் எந்த பெரிய மாற்றமும் இன்றி, மைனஸ், 0.84 சதவீதமாக உள்ளது.கடந்த வாரம் வெளியான, சில்லரை விலை பணவீக்கம் குறித்த அறிவிப்பில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் நவம்பர் மாதத்தில், 5.54 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வுக்கு, காய்கறிகள், பருப்பு மற்றும் புரதம் மிகுந்த பொருட்களின் விலை அதிகரித்தது காரணமாக அமைந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.