தூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு முதல் அதிகாலை வரை நிகழ்ந்த பெரும்பாலான COVID-19 நோயாளிகள் இறப்பில் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருப்பதை தமிழக மருத்துவர்கள் கவனித்தனர். அதன்படி நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே இறப்புகள் அதிகம் நிகழ்ந்தன. இந்நேரத்தில் நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவில் ஏற்படும் மாற்றமே இதற்கு காரணம் எனவும் அறிந்துக் கொண்டுள்ளனர். எனவே நோயாளிகள் பகல் நேரத்தில் இருப்பதை விட அதிக இரவில் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படுகிறார்கள். மேலும் இரத்தத்தில் மாற்றமடையும் ஆக்சிஜன் அளவைப் பொறுத்து சிகிச்சை நெறிமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் செறிவு என்றால் என்ன?
நம் மருத்துவர்களின் கண்டுபிடிப்பு மற்றும் விளக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், உயிரியல் பகுதி 101 பற்றியும் தெரிந்துக் கொள்வது அவசியம். இதில் செல்களின் அமைப்பு செயல்பாடு போன்ற அடிப்படை உயிரியல் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளது. ஆர்வமிருப்பவர்கள் படித்துப் பார்க்கலாம். “ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸ் இருந்தால் மட்டுமே அனைத்து திசுக்களும் செல்களும் செயல்படும். ஒரு உயிரினத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வேண்டிய ஆற்றலைக் குளுக்கோஸ் அளிக்கிறது. அந்த ஆற்றலை ஆக்ஸிஜன் நமது உடலின் அனைத்து திசுக்களுக்கும் செல்களுக்கும் விநியோகிக்கும் வேலையை செய்கிறது,”என்று கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பரந்தமான் விளக்கினார். இவர் மாநில COVID-19 ஆலோசனை நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளார். “உடல் முழுவதும் தேவைப்படும் ஆக்ஸிஜன் மற்றும் குளுகோஸ் இரத்தத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆக்சிஜன் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் மூலம் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான ஆக்சிஜன் தேவை நுரையீரல் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. மேலும் இரத்தத்தின் மூலம் ஆற்றலுக்கு தேவையான குளுக்கோஸும் கொண்டு செல்லப்படுகிறது.” இந்த குளுக்கோஸில் இருந்து ஆற்றலைப் பெற அது உடைக்கப்பட்டு பல வேதிவினைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த செயல்முறை நடைபெற ஆக்ஸிஜன் மிகவும் அவசியம் ஆகும். தற்போது நம்மால் இரத்தத்தின் ஆக்ஸிஜன் தேவையான அளவு இருக்க வேண்டியதன் அவசியம் புரிய ஆரம்பிக்கலாம்.

இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு பொதுவாக ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபினின் திறனைப் பொறுத்து இருக்கும். “சில சமயங்களில் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு 13 கிராமுக்கு குறைவாக இருந்தால், நுரையீரலில் இருந்து அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைத்தாலும் எடுத்துச் செல்ல ஹீமோகுளோபின் பற்றாக்குறை இருப்பதால் அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவதில்லை. இதனை நாம் இரத்தசோகை என்கிறோம்,”என்று டாக்டர் பராந்தமன் விளக்கினார். ஆனால் COVID நோயாளிகளில், பிரச்சினை இதன் தலைகீழ் ஆகும். வைரஸ் நுரையீரலைத் தாக்கி, ஆக்ஸிஜனை உட்கொள்ளும் திறனைக் குறைப்பதால், போதுமான ஹீமோகுளோபின் இருந்தும் கூட உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்த முடியாது.
“ஹீமோகுளோபின் அளவு கோவிட்-19 நோயாளிக்கு போதுமான அளவு (13 அல்லது 15 கிராம்) இருக்கலாம். ஆனால் நுரையீரலில் இருந்து தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை,” என்று விளக்கினார் டாக்டர் பராந்தமன்.

சரியான அளவு ஹீமோகுளோபினும், ஆக்ஸிஜனும் இருந்து செல்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கப்படுமானால் அது 100% செறிவு என்று அழைக்கப்படுகிறது. நமது உடல் உயிருக்கு ஆபத்து இன்றி ஓரளவேனும் இயங்க குறைந்தபட்சம் 85% சதவிகித செறிவு தேவை. தானாகவே இயங்க, செயல்பட 92% செறிவு தேவை. ஆனால் செறிவு 90% க்கும் குறைவாக இருந்தால், நோயாளிகள் எந்த நடவடிக்கையும் இல்லாமல், முழுமையாக ஓய்வெடுத்தால் மட்டுமே செயல்பட முடியும். அப்போதுதான் 90% செறிவூட்டல் நிலையிலும் அனைத்து செல்களின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஒவ்வொருவருக்கும், பகலிலும் இரவிலும் எனத் தனித்தனியாக உடல் செயல்பாடுகளுக்கு என கட்டமைக்கப்பட்ட போக்கு இருக்கும். பகலில் இருக்கும் போக்கு இரவில் மாறுபடும். பொதுவாக மனித செயல்பாடுகள் உறக்கத்திம்போது குறையும் என்பதால் இந்த மாற்றம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.
உதாரணமாக, சாதாரண நிலையில் 78 ஆக இருக்கும் இதய துடிப்பு தூக்கத்தின் போது குறையும்; 20 ஆக இருக்கும் சுவாச வீதம் 15 வரை குறையும். இது சாதாரண தினசரி உடலியல் செயல்முறை. இது நடக்கவில்லை என்றால், நம்மால் தூங்க முடியாது. உதாரணமாக, ஒருவருக்கு அட்ரினலின் ஒரு டோஸ் வழங்கப்பட்டால், அவரால் தூங்க முடியாது. உதாரணமாக, தேர்வின்போது பதட்டமாக இருக்கும் ஒருவரின் இரத்தத்தில் அட்ரினலின் அதிகமாக இருக்கும். அதனால் தான் அவர் பதட்டமாக இருக்கிறார் மற்றும் அவரால் தூங்க முடியாது,” என்று டாக்டர் பரந்தமன் விளக்கினார். இது பொதுவாக நடுநிசி நேரத்தில் இருந்து அதிகாலை 3 மணி நேரத்திற்குள் நடக்கும்.

COVID நோயாளிகளில், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் வீதம் ஏற்கனவே குறைவாக உள்ளது. மேலும் இயற்கையாக நடக்கும் நிகழ்வாக மேலும் இரத்தத்தின் ஆக்சிஜன் அளவும், இதயத் துடிப்பும் குறைவதால் ஏற்கனவே தீவிர நோய் பாதிப்பில் இருக்கும் நோயாளிகளினால் தாங்க இயலாமல் மரணம் சம்பவிக்கிறது. இரத்தத்தின் ஆக்சிஜன் அளவு குறைவது ஹைஃபாக்ஸியா (குறைந்த ஆக்ஸிஜன் செறிவு) என்று அழைக்கப்படுகிறது. இதுவே நடுநிசி நேர அதிக இறப்புகளுக்கு காரணமாகிறது. இதைத்தான் நாங்கள் எங்கள் ஐசியு-களில் கவனித்திருக்கிறோம்,” என்றார் டாக்டர் பராந்தமன்.
“நாம் விழித்திருக்கும்போது நமது தானியங்கி ரிசப்டார்கள் எச்சரிக்கை நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது இந்த ரிசப்டார்கள் எச்சரிக்கை அடைந்து மூளையை எச்சரிக்கை செய்யும். இதனால் நுரையீரல் மேலும் அதிகக் காற்றை நிரப்பி ஆக்சிஜன் அளவை சமன் செய்யும். இதுவும் இயற்கையாக நமது உடலில் நடக்கும் ஒரு எச்சரிக்கை செயல்முறை ஆகும். அனால் ஒருவர் தூக்கத்தில் இருக்கும்போது இது வேலை செய்யாது. அதனால்தான் கோவிட் நோயாளிகள் இரவில் அதிக மூச்சுத் திணறலை உணர்கிறார்கள், ” என்று அவர் கூறினார். இது ஒரு சிறிய கண்டுப்பிடிப்பாக இருந்தாலும், தமிழக மருத்துவர்களின் முக்கியமான கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேழும் இது கோவிட்-19 சிகிச்சையில் பெரும் மாற்றம் செய்யப்படவும் காரணமாக இருந்தது என்று டாக்டர் இளங்கோவன் கூறினார்.
“இந்த நடுநிசி மரணங்கள் உலகெங்கிலும் காணப்பட்டாலும் அதை குறிப்பாக உணர்ந்து உரிய காரணங்களுடன் விளக்கியது தமிழக மருத்துவர்கள் மட்டுமே,” என்று அவர் கூறினார்.

நமது மருத்துவர்கள் இதை எவ்வாறு சமாளித்தனர்?
இரத்தத்தில் ஆக்சிஜன் குறையக் கூடும் என்பதால் இரவில் நோயாளிகளின் கண்காணிப்பு மேலும் அதிகப்படுத்தப்பட்டது. “இரவு நேரங்களில், நோயாளிகளுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்குகிறோம். இரவில் ஆக்ஸிஜன் அளவு சரியாக உள்ளதை அடிக்கடி கண்காணித்து உறுதி செய்கிறோம். பகலில் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை செறிவூட்டலை கண்காணிக்கிறோம் எனில், இரவில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் கண்காணிக்கிறோம். ஒரு துளியளவு சந்தேகம் இருந்தாலும், நாங்கள் நோயாளியை எழுப்பி தேவையான மருத்துவ உதவியை வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

Dr. Paranthaman, Kilpauk Medical College Hospital
செயல்படாமல் இருத்தலின் முக்கியத்துவம்
தமிழக மருத்துவர்களின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பாக, செயலற்று இருத்தலின் குறிப்பாக தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் செயலற்று இருத்தல் நிலை மற்றும் அதன் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. இதுவும் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவுடன் தொடர்புடையது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒருவர் தொடர்ந்த செயல்பாட்டில் இருக்க வேண்டும் எனில் அவருக்கு அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படும். கோவிட்-19 நோயாளிகள் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாக குறைந்த ஆக்சிஜன் அளவு, குளுக்கோஸ் விநியோகம் தடை காரணமாக குறைந்த ஆற்றல் விநியோகம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார். இவர்கள் தொடர்ந்த செயலில் இருக்க முற்பட்டால் அவர்களுக்கு த் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஆற்றல் பற்றாக்குறை காரணமாக திடீர் இதயம் செயலிழப்பு ஏற்படலாம்.
உதாரணமாக, “தீவிர பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கோவிட்-19 நோயாளியின் ஆக்சிஜன் அளவு முழுமையாக இல்லாம 85% வரை குறைந்திருக்கலாம். இவர் ஒரு சாதாரண நிகழ்வாக கழிவறையை உபயோகிக்க முற்பட்டாலும் ஆக்சிஜன் அளவு குறைந்து 75% -இல் இருந்து 40% வரை குறையும் வாய்ப்பு உண்டு. இந்நிலையில் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீர் இதயம் செயலிழப்பு ஏற்படலாம்” என டாக்டர் பரந்தாமன் விளக்கினார்.
இந்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உணவருந்துதல் கூட ஒரு செயல்பாடாக கருப்படும். நோயாளி முழு வயிறுக்கு சாப்பிட நேர்ந்தால், அவர் அதை ஜீரணிக்க அதிக ஆளவு ஆக்சிஜன் தேவைப்படும். பேசுவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று ஆகும். எனவே கோவிட்-19 நோயாளிகள் அதிக உணவு, அதிக பேச்சு மற்றும் கழிவறையை உபயோகித்தல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இது அனைத்தையும் படுக்கையிலேயே மேற்கொள்ளும் “பெட்பான்” உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படுகின்றன.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இணைந்து டீன் பேராசிரியர் வசந்தமணியின் கீழ் உள்ள கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு இந்த நெறிமுறைகளைக் கவனித்து உருவாக்கி வருகிறது. வைராலஜிஸ்டுகள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் அடங்கிய ஒரு நிபுணர் குழுவும் COVID-19 சிகிச்சை நெறிமுறைகள் குறித்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
English: Sandhya Ravishankar
தமிழில்: லயா
[youtube-feed feed=1]