காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

கர்நாடகாவின் காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. அதுபோல, தமிழகத்திலும்  பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள  அணைகளில்  இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அங்குள்ள கபினி அணை நிரம்பி உள்ள நிலையில், அதிலிருந்து  திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு  16,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர் அதிக அளவில் வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக,  காவிரி டெல்டா மற்றும் மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு  படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது,  கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால் , காவிரி கரையோரம் உள்ள சேலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்கும்படி அரசு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.