சென்னை:
மிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை போன்றே தமிழ்நாட்டிலும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று (ஏப்ரல் 10ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.

எனினும், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வந்துவிட்டதாக அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1.31 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 5,441 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பெருந்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருவிழாக்களுக்குத் தடை, பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி, திரையரங்குகள், மால்கள் போன்றவற்றில் 50 சதவிகிதம் பேரையே அனுமதிக்க வேண்டும், ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம் உள்ளிட்ட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வருகின்றன.

இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று 2வது நாளாக 5 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.76 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பகல் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் நடக்க உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.