கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஒவ்வொரு மாநிலமும் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டுமென்றுள்ளார் கட்டுரையாளர் பிரசாத் ரவீந்திர நாத்.
அவர் கூறியுள்ளதாவது, “சென்னையைப் பொறுத்தவரை, பரிசோதனை அளவு கடந்த 2 வாரங்களுக்கு அதிகரிக்கப்பட்டது. அதன்விளைவாக, கடந்த சில நாட்களாக, பரிசோதனையில் பாசிடிவ் அளவு 35% என்பதிலிருந்து 20% என்பதாக அங்கே குறைந்துள்ளது.
கொரோனா பரவலை ஒரு உலகளாவிய தொற்று நோயாக, உலக சுகாதார அமைப்பு, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் அறிவித்ததிலிருந்து, உலகளவில் இதுவரை அந்நோய் பரவும் வேகமும், இறப்பு விதிகமும் மட்டுப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் முதல் பாசிடிவ் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஜூன் 29ம் தேதி வரையிலான நிலவரப்படி, 1 கோடி நோயாளிகள் என்ற எண்ணிக்கை அளவைத் தாண்டியது. மரணமடைந்தோர் எண்ணிக்கையும் 5 லட்சம் என்பதை தாண்டி அதிர்ச்சியளித்தது.
இதுவரை, கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கையில், ஜூன் மாதம் மட்டுமே 60% பங்களிப்பை ஆற்றியது என்பது கவனிக்கத்தக்கது. அம்மாதத்தின் இரண்டாவது பாதியில் மட்டுமே, ஒவ்வொரு நாளும் 1.5 லட்சம் நோயாளிகள் தினசரி கூடினர்.
கடந்த ஜூன் 26ம் தேதி மட்டும், புதிதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1.90 லட்சமாக இருந்தது. உலகளவிலான தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 27 லட்சம் நோயாளிகளும், பிரேசில் நாட்டில் 15 லட்சம் நோயாளிகளும், இந்தியாவில் 6 லட்சம் நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதம் 1ம் தேதி மட்டும், அமெரிக்காவில் 50000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், அந்நாட்டில் ஒருநாளைக்கு 1 லட்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மும்பை, டெல்லி மற்றும் சென்னை நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 18399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் இதுவரை 85000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்(சீனாவைவிட அதிகம்), மும்பையில் 82000 பேரும், சென்னையில் 60500 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்தப் பிறகு அங்கு தொற்று விகிதத்தில் சரிவு ஏற்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 15 நாட்களுக்கு முன்னர், தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ‍அதன் விளைவாக, தற்போதைய நிலையில், தொற்றின் வேகம் 35% என்பதிலிருந்து 20% என்பதாக குறைந்துள்ளது.
மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறியப்பட்டு, அவர்களும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொள்வதும் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வழிமுறை.
அதேசமயம், தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை 1.4% என்ற வகையில் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், மராட்டியத்தில் 4.4% என்ற அளவிலும், டெல்லியில் 3.1% என்ற அளவிலும், குஜராத்தில் 5.6% என்ற அளவிலும் உள்ளன.
எனவே, ஒவ்வொரு மாநிலமும், பெரும் முயற்சிகள் மேற்கொண்டு, பரிசோதனை அளவை பெரியளவில் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் தெரிய வருவதோடு, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, நிலைமையை சீர்செய்ய முடியும்.
இந்த விஷயத்தில், பரிசோதனைகளை அதிகரிக்காமல், நோய் பரவல் குறைந்துள்ளதாக ஒரு செயற்கை சித்திரத்தை உருவாக்குவது பயன்தராது. அதிகளவிலான பரிசோதனை மட்டுமே, கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி!” என்றுள்ளார்.