நம்பமுடியாத நினைவாற்றல் : எப்படி பந்து வீசினாலும் அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெக்-க்ராத்

 

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உலகின் முன்னணி பந்துவீச்சாளருமான கிளென் மெக்-க்ராத் 1993 முதல் 2007 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் நேற்று முடிந்த டெஸ்ட் போட்டியின் போது, கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே வுக்கும் இவருக்கும் இடையே நடந்த சுவாரசியமான கலந்துரையாடலின் போது, மெக்-க்ராத்தின் அபார நினைவாற்றல் வெளிப்பட்டது.

மெக்-க்ராத்திடம் நீங்கள் எடுத்த 273 வது விக்கெட் என்னவென்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, அது இந்தியாவின் ராகுல் டிராவிட் என்று சட்டென்று பதில் சொல்லி அசத்தினார்.

எப்படி உங்களால் சரியாக சொல்லமுடிந்தது என்று போக்லே ஆச்சரியத்துடன் கேட்க, ஆரம்பத்தில் நான் எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை.

380 விக்கெட்டை கடந்த நிலையில் இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்தேன், இப்போது நீங்கள் என்னுடைய முதல் விக்கெட் முதல் 563 வரை எந்த விக்கெட் பற்றி கேட்டாலும் பதில் சொல்லுமளவிற்கு ஞாபகம் வைத்திருக்கிறேன் என்று கூறினார்.

அப்படியானால் உங்கள் 300வது விக்கெட் எது ? என்று கேட்டதும்.

அது எனக்கு நன்றாகவே தெரியும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடந்த போட்டியில் எடுத்தேன், அதுவரை 298 விக்கெட்டுகளை எடுத்திருந்த நான், ஷெர்வின் கேம்பெல்லின் விக்கெட்டை 299 வது விக்கெட்டாக கைப்பற்றினேன், அடுத்து களமிறங்கிய பிரையன் லாரா-வின் மட்டையின் விளிம்பில் பட்டு சென்ற பந்தை மெக்கில் சிறப்பாக கேட்ச் பிடித்ததன் மூலம், லாராவின் விக்கெட் 300 வது விக்கெட்டாக எனக்கு அமைத்ததோடு, அடுத்த பந்தில் ஆடம்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தேன்.

421 வது விக்கெட் எது ? என்று விடாமல் ஹர்ஷா போக்லே கேட்க,

ஷார்ஜாவில் நடந்த போட்டியில் கைப்பற்றிய வக்கார் யூனுஸ் விக்கெட் 400 வது, அந்த தொடரின் முடிவில் 403 எடுத்திருந்தேன். அடுத்து இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 19 விக்கெட் எடுத்தேன், அதனால் 421 அந்த தொடரில் தான் எடுத்திருக்க வேண்டும்.

ஆம், 421 வாகன் கிளீன் போல்ட் ஆனது தான், அந்த விக்கெட் என்று கூறி ஹர்ஷா போக்லேவை கிளீன் போல்ட் ஆக்கினார்.

இப்படி எந்தவொரு நிகழ்வையும் அது எங்கு எப்போது எப்படி நடந்தது என்பதை துல்லியமாக தன் மனதில் படம் பிடித்து வைத்திருக்கும் மெக்-க்ராத்தின் இந்த ஆற்றலை கண்டு ஹர்ஷா போக்லே மட்டுமல்ல ரசிகர்களும் வியந்துபோனார்கள்.