டெஸ்ட் போட்டி: ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தால் சுருண்ட இங்கிலாந்து அணி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் அறிமுகமாகிய இந்திய வீரர் ரிஷப் பண்ட், அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, இங்கிலாந்து அணி 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

ind-vs-eng

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சனிக்கிழமையன்று நாட்டிங்காமில் தொடங்கியது. முதல் நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களை எடுத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 97 ரன்களை குவித்தார்.

2வது நாள் போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பண்ட் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அஸ்வின் 14 ரன்களிலும், ஷமி மற்றும் பும்ரா சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் பாண்டியா வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் முன்னிலையில் வலுவாக உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பராக இருந்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற பெருமையை பெற்றார்.

ரிஷப் பண்ட் இங்கிலாந்தின் குக், ஜென்னிங்ஸ், போப், கிறிஸ் வோக்ஸ், அடில் ரசித் உள்ளிட்டோர் அடித்த பந்துக்களை கேட்ச் பிடித்து வீழ்த்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் அதிக கேட்ச் பிடித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமை ரிஷப் பண்ட் பெற்றார்.