தீவிரவாத தாக்குதல் நடந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்!!

டில்லி:

தீவிரவாத தாக்குதல் அதிகளவில் நடக்ககூடிய நாடுகள் பட்டியலில் ஈராக், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் 3ம் இடத்தில் இருந்த பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது என்று அமெரிக்க அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கடந்த 2016ம் ஆண்டில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 72 ஆகும். இதில் இந்தியாவில் மட்டும் 927 தாக்குதல்கள் நடந்துள்ளது. 2015ம் ஆண்டில் இந்த எண்க்கை 798ஆக இருந்தது. தற்போது 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் 2015ம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கையான 289ல் இருநது 17 சதவீதம் அதிகரித்து 337 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 500ல் இருந்து 636ஆக உயர் ந்துள்ளது.

அதே சமயம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதல் 27 சதவீதம் குறைந்துள்ளது. 2015ம் ஆண்டில் 1,010 என்று இருந்த தாக்குதல் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்து 734 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இந்த வித்தியாசம் குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஐஸ், தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கு அடுத்தபடியாக மாவோயிஸ்ட்கள் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளன. உலகம் முழுவதும் மாவோயிஸ்ட்கள் கடந்த ஆண்டு 336 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாக்குதல் இந்தியாவில் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், சட்டீஸ்கர், மணிப்பூர், ஜார்கண்ட் ஆகிய 4 மாநிலங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. மாவோயிஸ்ட்கள் கிழக்கு இந்திய பகுதியை தான் குறிவைத்து தாக்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த ஆண்டு 93 சதவீத தீவிரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இந்த மாநிலத்தில் 2016&17ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் தீவிரவாத தாக்குதலில் ஆள் கடத்தல் அல்லது பிணைய கைதிகளாக பிடித்து செல்லும் சம்பவம் 2015ம் ஆண்டை விட 63 சதவீதம் குறைந்து 317 என்ற எண்ணிக்கையில் உள்ளது. 2015ம் ஆண்டில் இது 866 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

2016ம் ஆண்டில் ஒரு தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் சராசரி எண்ணிக்கை 0.4 என்ற நிலையில் உள்ளது. உலகளவில் இது 2.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 3 காலாண்டுகளில் மரணம் இல்லாத தாக்குதல்கள் 73 சதவீதமாக உள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் பீகாரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட நக்சலைட் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தான் மோசமான தாக்குதலாக உள்ளது. இந்தியாவில் 3ல் 2 தாக்குதலை நக்சல்கள் மேற்கொள்கின்றன.

உலகம் முழுவதும் 334 தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 288ஆக இருந்தது. இந்தியாவில் 45 தீவிரவாத அமைப்புகள் 2015ம் ஆண்டில் இருந்தன. தற்போது இது 52ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் நடந்த தாக்குதல்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் நடந்த 11, 072 தாக்குதல் என்பது 2015ம் ஆண்டை விட 9 சதவீதம் குறைவாகும். அப்போது 12,121 தாக்குதல்கள் நடந்திருந்தது. அதேபோல் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 13 சதவீதம் குறைந்து 25 ஆயிரத்து 621 என்ற நிலையில் உள்ளது. 2015ல் இது 29 ஆயிரத்து 424 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான், யேமன் நாடுகளில் அதிக தாக்குதல்களும், உயிரிழப்புகளும் நடந்துள்ளது. பாதிப்புக்குள்ளான நாடுகளில் 55 சதவீத தாக்குதல்கள் ஈராக், பாகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ் நாடுகளில் நடந்துள்ளது. இதனால் 75 சதவீத உயிரிழப்புகள் ஈராக், பாகிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்துள்ளது.