குடிமகன்களே உஷார்- போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமாம் !

டில்லி:

மக்களவையில் நேற்று மோட்டார் வாகன  சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. 2016 மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.

அப்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்து பேசினார்.

இந்த மசோதா நிறைவேறிய பிறகு போக்குவரத்துத் துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று அப்போது கூறினார். 100 சதவித மின்னணு நிர்வாகத்தை இந்த மசோதா உறுதி செய்யும் என்று தெரிவித்த அமைச்சர், மின்னணு நிர்வாகம் நடைமுறைக்கு  வந்தால், போலி ஓட்டுநர் உரிமங்களை தயாரிக்க முடியாது என்பதோடு வாகனத்திருட்டும் நடக்காது என்று குறிப்பிட்டார். 

இதையடுத்து மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாபடி ஒருவர்  சாலை விதிகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், உரிமம் இல்லாமல் ஓட்டினால் ரூ.5000 அபராதமும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2000மும், மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். ஆர்டிஓ அலுவலகத்துக்குச் செல்லாமலே ஓட்டுநர் உரிமத்தை பெறலாம்.

ஆதார் எண்ணை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஓட்டுநர் உரிமம் வீடு தேடி வரும்.

சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் சாலை அமைக்க காண்ட்ராக்ட் எடுத்தவர்தான் பொறுப்பு என்பன பல்வேறு அம்சங்கள் திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் தரப்படும்.