தோகா: உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல்கணக்கில் இந்தியா தோற்றதன் மூலம், உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு தகர்ந்துள்ளது.

2022ம் ஆண்டின் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தவுள்ளது கத்தார். இதில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 40 ஆசிய அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி ப‍ங்கேற்ற 4 போட்டிகளில், 3 டிரா மற்றும் 1 தோல்வியுடன் பின்தங்கியிருந்தது. எனவே, வென்றேயாக வேண்டிய முக்கியமான போட்டியில் ஓமன் அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது.

ஆனால், வலிமையான ஓமன் அணியை வெல்லவோ அல்லது போட்டியை டிரா செய்யவோ, இந்திய அணியால் முடியவில்லை. போட்டியின் முதல் பாதியிலேயே ஓமன் அணி 1 கோல் அடித்து முன்னிலைப் பெற்றது.

இரண்டாவது பாதியில் இந்திய அணி முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியவில்லை. மேலும், ஓமன் அணியாலும் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. பந்து அதிகநேரம் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவே, இறுதியில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, உலகக்கோப்பை போட்டியில் நுழையும் வாய்ப்பை அநேகமாக இழந்துவிட்டது.