புதுடெல்லி: லடாக் தொடங்கி அருணாச்சலப் பிரதேசம் வரையிலான நீண்ட எல்லைப் பகுதிகளில் சீனா தனது துருப்புகளைக் குவித்து வருவதால், இந்தியாவும் தகுந்த பதிலடியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 4000 கி.மீ. நீளம் கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு நெடுகிலும் இந்தியாவும் தனது படைகளை குவித்து வருவதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளில் இந்திய ராணுவம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த பல்லாண்டுகளில், இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் பெரிய சச்சரவு ஏற்பட்டிருப்பது இப்போதுதான்.

இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் சீனா தனது துருப்புகளை திடீரென குவிக்கத் தொடங்கியது முதலே, இந்த நெருக்கடி தொடங்கியது. மேலும், நாகு லா பகுதியில் இந்திய ராணுவத்துடன் மோதலிலும் ஈடுபட்டது சீன ராணுவம்.

இந்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது; சீனா, லடாக் பகுதியில் மட்டும் தனது ராணுவ முஸ்தீபுகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்ரகாண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் என்று, எங்கெல்லாம் தனது எல்லைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறதோ, அங்கெல்லாம் தனது துருப்புகளை குவிப்பதோடு, கனரக ஆயுதங்களையும் கொண்டுவந்து பின்புறத்தே பொருத்தியுள்ளது.

எனவே, சீனா தரப்பிலிருந்து ஏதேனும் அத்துமீறல் நிகழாத வகையில், நாமும் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.