புதுடெல்லி: மனித உரிமை மீறல் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மைக்கலே பேச்சலெட் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு, இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் காட்டமாக பதிலளித்துள்ளன.

கொரோனா நெருக்கடி காலக்கட்டத்தில், ஆசிய – பசிபிக் நாடுகளில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொருத்தமானதாக இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தார் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மைக்கலே பேச்சலெட்.

தனது கருத்தில், இந்தியா, சீனா, வங்கதேசம், கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்நலாந்து மற்றும் வியட்நாம் நாடுகளைக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவரின் கருத்துக்கு பதிலளித்துள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், விலைமதிக்க முடியாத மனித உயிர்கள், கொரோனா வைரஸ் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களால் பலியாகக் கூடாது என்பதில் அரசுகள் கவனம் செலுத்துகின்றன மற்றும் உறுதியாக உள்ளன. தவறான தகவல்கள் என்பவை, பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்று கூறப்பட்டுள்ளது.