பெங்களூரு:

ந்திரயான்2 தரையிறங்குவதை நேரில் காணுவதற்காக பெங்களூர் வந்துள்ள பிரதமர் மோடி, நமது நாட்டு விஞ்ஞானிகளின் திறமையை மீண்டும் ஒருமுறை உலகம் பார்க்கப்போகிறது என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

130 கோடி இந்தியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் இன்று நடைபெற உள்ளது. இப்போதிலிருந்து சில மணிநேரங்களில், சந்திரயான் – 2 இன் இறுதிபாகம்  சந்திரனின்  தென் துருவத்தில் நடக்கும். இந்தியாவும், உலகின் பிற பகுதிகளும் நமது விண்வெளி விஞ்ஞானிகளின் முன்மாதிரியான வலிமையைக் மீண்டும் காணும் என்று தெரிவித்து உள்ளார்.

சந்திரயான் 2 விண்கலம், நிலவில் தரை இறக்கப்படும் நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக, பிரதமர் மோடி பெங்களூரு வருகை தந்துள்ளார். முன்னதாக அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், 130 கோடி இந்தியர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த தருணம் வந்து விட்டதாக கூறியுள்ளார்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை, பெங்களூருவின் இஸ்ரோ மையத்தில் இருந்து பார்க்கப் போவதை நினைத்து உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளதாகப் பதிவிட்டுள்ள மோடி, பூடான் நாட்டு மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும், சிறப்பான தருணத்தில் தம்முடன் இணைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞர்கள் அனைவரும் இஸ்ரோவின் விண்வெளி சார்ந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்று கூறியுள்ள மோடி, இந்தப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றது, அறிவியல் மற்றும் விண்வெளி மீதான இளைஞர்களின் ஆர்வத்தை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அறிகுறி எனவும் பாராட்டியுள்ளார்.

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது முதல், அதுகுறித்த அன்றாடத் தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ள மோடி, இத்திட்டமானது, இந்தியர்களின் திறமைகளையும், உறுதியையும் வெளிப்படுத்தி இருப்பதாகவும் நெகிழ்ந்துள்ளார்.

சந்திரயான் 2 திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், சிறப்பான தருணத்தை அனைவரும் பார்த்து, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அவற்றில் சில புகைப்படங்களை தாம் ரீ-ட்வீட் செய்யப் போவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.