இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான முக்கியமான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
download (1)
இதன் மூலம், ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவச் சொத்துகளை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ராணுவக் கருவிகளை பழுது பார்த்தல் மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றுக்கு இரு நாடுகளின் ராணுவத் தளங்களைப் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் கையெழுத்திட்டார்.
எனினும், ஒரு நாட்டின் படைகளை மற்றொரு நாட்டில் நிறுத்துவதை இந்த ஒப்பந்தம் அனுமதிக்காது.
இந்த பயணத்தின்போது, பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கை, விமானம் தாங்கி கப்பல் திட்டம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தை சீனா கண்டித்துள்ளது. இது ஆசிய பிராந்தியத்தில் ராணுவ சமன்பாட்டை குலைக்கும் என்றும், இதன் விளைவுகள் விரும்பத்தகாததாக இருக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இந்திய அரசியல் நோக்கர்களும் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளனர். “ஏற்கெனவே பொருளாதாரத்தில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது இந்த நிலையில் ராணுவத்திலும் அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்.

மனோகர் பாரிக்கர்
மனோகர் பாரிக்கர்

ஈராக் மீது அமெரிக்கா போரிட்டபோது, அந்நாட்டு ராணுவ விமானங்களை இந்தியாவில் இறங்கி எரிபொருள் நிரப்ப அனுமதிக்கவில்லை. காரணம், அப்போது இருந்த சந்திரசேகர் தலைமையிலான ஆட்சி, ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் ஆதரவோடு இருந்தது. அமெரிக்க விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்பக்கூடாது என்று ராஜீவ்காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் அமெரக்கா சார்பு நாடாக இந்தியாவை மாற்றிவிட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு” என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.