ராஞ்சி:

ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் தொடரில் முதல் நாள் ஆட்ட  முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 299 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட், ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில்  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வார்னர், ரென்ஷா ஜோடி ஆட்டத்தை துவக்கியது. வழக்கம் போல, 6வது ஓவரில் ஜடேஜா சுழலில் வார்னர் (19) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய ரென்ஷாவை (44) உமேஷ் பந்துவீச்சு வெளியேற்றியது.

அடுத்ததாக வந்த  ஷான் மார்ஷ் (2) அஷ்வினில் சுழலில் சுருட்டி வீசப்பட்டார். தொடர்ந்து   ஹேண்ட்ஸ்கோம்ப் (19) உமேசின் யாக்கர் பந்துவீச்சில் எல்பிடபிள்யு  ஆகி வெளியேறினார்.

140 ரன்னில் 4 விக்கெட்டை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் அவர்களின் பந்துவீச்சு  ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஜோடியிடம் எடுபடவில்லை.

அவர்கள்  இணை இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை அனாயாசமாக அடித்து தூள் கிளப்பினர். இந்திய பந்துவீச்சாளர்களை ஸ்மித் மிக எளிதாக எதிர்கொண்டார். எந்த நெருக்கடியும் இல்லா மல் நிதானமாக ஆடி சதம் அடித்து தனது திறமையை நிலைநிறுத்தினார்.

டெஸ்ட் அரங்கில் ஸ்மித்தின் 19வது சதம் இது. இந்த டெஸ்டில் புதியதாக இடம்பெற்றுள்ள மேக்ஸ்வெல்லும் தனது ஆட்டத்தை பிரதமாக வெளிப்படுத்தினார்.  இவர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது.

ஸ்மித் 117, மேக்ஸ்வெல் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 500க்கும் அதிகமான ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.