இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி!

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுடைய கடற்படைகள், இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் இந்தப் பயிற்சி, மொத்தம் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில், இந்திய போர்க் கப்பல்களான ஐஎன்எஸ் சயாத்ரி, கர்முக், ஆஸ்திரேலிய போர்க்கப்பலான ஹோபர்ட் மற்றும் இரு நாடுகளுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் பங்கேற்றுள்ளன.

மேலும், இந்தியாவின் பி-81 ரக போர் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் செயல்பாட்டுத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இருதரப்பு உறவை வலிமைப்படுத்தும் விதமாகவும், பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாகவும் கூட்டுப்பயிற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.