தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் வங்கதேச அணியுடன் போராடி டிரா செய்துள்ளது இந்திய அணி. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டில் கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய அணிகளுக்கான பிரிவுகளில், இந்திய அணி, கத்தார், ஒமன், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இதுவரை கலந்துகொண்ட 2 போட்டிகளில் ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவைப் பெற்றுள்ளது இந்திய கால்பந்து அணி. இந்நிலையில் வங்கதேச அணியுடன் மோதியது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், போட்டி வேறுமாதிரியாக இருந்தது முதல் பாதியில் வங்கதேச வீரர் சாத் உதீன் கோலடிக்க, வங்கதேச அணி முன்னிலைப் பெற்று இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் இரண்டாவது பாதியில், கார்னர் கிக் மூலமாக கிடைத்தப் பந்தை இந்திய வீரர் அடில் கான் கோலாக மாற்ற இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பியது.

பின்னர், எஞ்சிய நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. உலக கால்பந்து தரநிலையில், இந்தியா 104வது இடத்திலும், வங்கதேசம் 187வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.