எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியான வணிகத்திற்கு தடைவிதித்த இந்தியா

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் நடந்துவந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியான வணிகத்திற்கு தடை விதித்துள்ளது இந்தியா.

இந்த வணிக வழியை, பாகிஸ்தானிலுள்ள வேண்டாத சக்திகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் மற்றும் கள்ளநோட்டு ஆகியவற்றை கடத்துவதற்கு பயன்படுத்துவதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு ஏப்ரல் 19ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். காஷ்மீர் மாநிலத்தின் வழியே நடைபெறும் இந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வர்த்தகம், எல்லையோர கிராமங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார பொருட்களை வழங்குவதற்காக நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரமுல்லா மாவட்டத்தின் சலாமாபாத் மற்றும் ஊரி, பூன்ச் மாவட்டத்தின் சக்கான்-டா-பாக் ஆகிய மையங்களின் வழியே இந்த வணிகம் நடத்தப்பட்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் நடத்தப்படும் இந்த பண்டமாற்று வணிகத்திற்கு எந்த வரியும் கிடையாது.

– மதுரை மாயாண்டி