கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலைப் பெற்றது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. இந்த சுமாரான ஸ்கோரை வைத்து, இந்தியாவால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், ஆஸ்திரேலியா களமிறங்கிய பிறகு, நிலைமை வேறாக இருந்தது. கேப்டன் பின்ச், ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. ஓரளவு தாக்குப்பிடித்த நின்ற ஹென்ரிக்ஸால் 30 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை. மேத்யூ வேட் 7 ரன்களிலும், சீன் அபோட் 12 ரன்களிலும் நடையைக் கட்ட, இந்தியாவின் வெற்றி உறுதியானது.

துவக்க வீரராக களமிறங்கி, நீண்டநேரம் நின்ற ஷார்ட், அதற்கு சற்று முன்னதாகவே அவுட்டாக, கடைசிநேர அற்புதத்தை நம்ப வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு. கடைசி கட்டத்தில், ஸ்வெப்சன் 1 சிக்ஸர் & 1 பவுண்டரி என்று அடித்தாலும் புண்ணியமில்லை. வெற்றி வித்தியாசத்தை மட்டும் குறைத்துக் கொண்டது ஆஸ்திரேலியா.

20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஆஸ்திரேலியா.

இந்தியா தரப்பில் சாஹல், 4 ஓவர்களில் 25 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தீபக் சஹார் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைப் பெற்றார். வாஷிங்கடன் சுந்தருக்கு விக்கெட் விழவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.