அதே 8 விக்கெட்டுகள் வித்தியாச வெற்றி – அடியெல்டு தோல்விக்கு பழிதீர்த்த இந்தியா!

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வென்று சரியான பதிலடியைக் கொடுத்துள்ளது இந்தியா.

மூன்றாவது நாள் முடிவில், 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இன்று ஆட்டத்தை துவக்கிய ஆஸ்திரேலியா, 200 ரன்களை எட்டியது. அந்த அணியின் கேமரான் கிரீன் 45 ரன்களை அடித்தார்.

நேற்று அவுட் வாய்ப்பிலிருந்து தப்பிய பேட் கம்மின்ஸ் 22 ரன்களை அடித்தார். மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களும், ஹேசில்வுட் 10 ரன்களும், லயன் 3 ரன்களும் அடிக்க 200 ரன்கள் கிடைத்தது அந்த அணிக்கு. இதனையடுத்து இந்திய அணிக்கான இலக்கு 70 என்றானது.

அதாவது, கடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட இது குறைவானதே.

இந்திய அணி சார்பில், புதிதாக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், அற்புதமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு தலா 2 விக்கெட்டுகளும், காயத்தால் வெளியேறிய உமேஷ் யாதவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது. அதாவது, ஆட்டத்தின் பெரும்பகுதி, இந்திய அணி 4 பவுலர்களுடனேயே செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய சவாலுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, இம்முறையும் 5 ரன்களில் அவுட்டாகி கடுப்பேற்றினார் மயங்க் அகர்வால். புஜாரா வெறும் 3 ரன்களில் வெளியேற, வெற்றிக்கான பொறுப்பை கேப்டன் ரஹானேவும், ஷப்மன் கில்லும் ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் நிதானமாகவும் சீராகவும் விளையாடினர். கில் 35 ரன்களையும், ரஹானே 27 ரன்களையும் அடித்திருந்தபோது இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது.