புரோ லீக் ஹாக்கி – ஆஸ்திரேலியாவை பெனால்டி ஷுட் அவுட்டில் வீழ்த்திய இந்தியா!

புவனேஷ்வர்: புரோ ஹாக்கி லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 3-1 என்ற கோல் கணக்கில், பெனால்டி ஷுட்அவுட் முறையில் வீழ்த்தியது இந்திய அணி.

‍உலகளவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கும் புரோ லீக் ஹாக்கித் தொடரின் கடந்தப் போட்டியில், இதே ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்திய அணி. இத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறைகள் மோதும்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை மீண்டும் எதிர்கொண்டது இந்திய அணி. இப்போட்டியில், இந்தியாவின் ருபீந்தர் மற்றும் ஹர்மன்பிரீத் ஆகியோர் தலா 1 கோல் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பிலும் 2 கோல்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையை எட்டின.

இதனால், வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான பெனால்டி ஷுட் அவுட் நடத்தப்பட்டது. இதில், இந்திய அணி 3 கோல்களும், ஆஸ்திரேலிய அணி 1 கோலும் மட்டுமே அடிக்க, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது.

இதுவரை இத்தொடரில் மொத்தம் 6 போட்டிகளை ஆடியுள்ள இந்தியா, 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 டிரா என மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.