லண்டன்: வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்தியாவின் 314 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல், 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது வங்கதேசம்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. வங்கதேச அணியின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணியுடனான போட்டி நடந்த எட்பாஸ்டன் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடந்தது. இதனால், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது. இப்போட்டியிலும் ரோகித் ஷர்மா சதம் அடித்தார். துவக்க வீரர் ராகுல் அரைசதம்(77) அடித்தார்.

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரைசதம் அடித்துவந்த விராத்கோலி, இப்போட்டியில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 48 ரன்களை அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 8 ரன்களே எடுத்தார்.

முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 314 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச தரப்பில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போட்டியில் வங்கதேசம் மொத்தம் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

பின்னர் 314 ரன்களை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய வங்கதேசத்தை தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் மிரட்டி வந்தனர். இந்தியா மொத்தம் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. முக்கியமாக ஹர்திக் பாண்ட்யா வங்கதேச அணிக்கு பெரிய தொல்லையாக இருந்தார். அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒரே சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு சாஹல் தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டை எடுத்தார். சிறப்பான சிக்கனத்துடன் பந்துவீசிய பும்ரா கடைசி நேரத்தில் அதிர வைத்தார். அவர் இப்போட்டியில் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த 4 விக்கெட்டுகளும் ஸ்டம்புகளைப் பெயர்த்து கிடைத்த விக்கெட்டுகள். ஒரு அளவிற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத வங்கதேச அணி 286 ரன்களுக்கெல்லாம் சரணடைந்துவிட்டது.

அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் முகமது சய்ஃபுதீனும் அரைசதம் எடுத்தனர். செளம்யா சர்கார் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோர் 30 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இந்த தோல்வியின் மூலம், வங்கதேச அணிக்கு அடுத்து எஞ்சியுள்ள ஒரே போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தினாலும் அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு முடிந்துபோனது.