அபார வெற்றி: வங்கதேசத்தை 7 விக்கெட் வித்யாசத்தில் சுருட்டிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிப்பெற்றது. ஜடேஜா, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு வங்கதேச வீரர்களுக்களுக்கு கடும் சவாலாக அமைந்தன.

ind

14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் தகுதி சுற்றில் தோல்வியடைந்த இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறின.

லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று சூப்பர் 4 சுற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற ரோகித் தலைமையிலான அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்கிய ஐந்தாவது ஓவரில் லிடன் தாஸை இந்தியாவின் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் நஜ்முல் ஹுசைனை பும்ரா வெளியேற்றினார்.

இதனை தொடர்ந்து ஜடேஜாவின் அனல் பறக்கும் பந்து வீச்சில் வங்கதேசத்தின் முக்கிய வீரரான சகிப் அல் ஹசன் விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து 30 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் வெளிப்படுத்தினர். இதனால் ரன் எடுக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் திணறினர்.

இதனால் வங்கதேசம் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களை எடுத்தது. ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர். வங்கதேச அணியில் மெய்தி ஹசன் 50 பந்துகளில் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். 16.1 ஓவரில் இந்தியா 61 ரன்கள் எடுத்திருந்த போது, சஹிப் அல் ஹசன் பந்தில் தவான் விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு களமிறங்கிய ராயுடு சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பிறகு ரோஹித் சர்மாவுடன், தோனி கைக்கோர்த்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 170 ரன்களை வரை எடுத்து சென்ற நிலையில் மஷ்ரப் பந்தை எதிர்கொண்ட தோனி ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்தார்.

இதனை தொடர்ந்து இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. இதற்கு முன்பு இந்தியா 26 ரன்கள் வித்யாசத்தில் ஹாங் காங் அணியையும், 8 விக்கெட் வித்யாசத்தில் பாகிஸ்தான் அணியையும் வெற்றிக் கொண்டது.