கொழும்பு,

லங்கையை சொந்த மண்ணிலேயே வென்று,  டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

இலங்கை இந்தியாவுக்கான டெஸ்ட் 3வது டெஸ்ட் தொடரில் 171 ரன்களில் வித்தியாசத்தில்  இந்திய அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, 3 டெஸ்ட் தொடரிலும் வெற்றிபெற்று இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட் செய்ய தொடங்கியது. இந்திய அணியின் இளம்வீரர்களான  தவான் மற்றும் பாண்டியாவின் அதிரடி சதத்தால் 487 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி  இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 135 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்  குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி  4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 352 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இலங்கை அணியை இந்திய கேப்டன் கோலி ஃபாலோ ஆன் செய்ய அழைத்தார்.

அதன்படி இலங்கை அணி ஒரே நாளில் 2-வது முறையாக தனது பேட்டிங் இன்னிங்ஸை தொடங்கியது.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 333 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. முதலில் அஸ்வின் சுழலில் தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே 16 ரன்களில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

அவரையடுத்து “நைட்-வாட்ச்மேனாக” களமிறங்கிய புஷ்பகுமாரா 1 ரன்னில் ஷமி வேகத்தில் வீழ்ந்தார்.

2-வது டெஸ்ட் ஃபாலோ ஆனில் சிறப்பாக விளையாடி சதமடித்த குசால் மெண்டிஸ் இந்த போட்டியின் ஃபாலோ ஆனில் சோபிக்க தவறினார். அவர் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்தில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.

இதனால் அந்த அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அதன் பின் கேப்டன் சண்டிமாலும், மேத்யூஸும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

சிறிது நேரம் மட்டும் தாக்குபிடித்த இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சண்டிமால் குல்தீப் வலையில் சிக்கினார்.

அவரையடுத்து மேத்யூஸும் 35 ரன்களில் அஸ்வின் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

பெரேரா, சன்டாக்கன் ஆகியோரும் 8 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணிக்கு ஓரளவு ஆறுதல் அளித்த டிக்வெலாவும் 41 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார். கடைசி விக்கெட்டாக குமாராவை அஸ்வின் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

அந்த அணி 2-வது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்களில் வென்றது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்திய அணி குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை எதிரணி மண்ணில் வைத்து முழுமையாக கைப்பற்றுவது இதுவே முதல் முறை.

முதல் இன்னிங்ஸில் ருத்ரதாண்டவம் ஆடி சதம் அடித்த ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர் நாயகன் விருதை ஷிகர் தவான் தட்டிச் சென்றார்.