புரோ ஹாக்கித் தொடர் – நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா!

--

கட்டாக்: புரோ ஹாக்கித் தொடரில் வலிமைவாய்ந்த நெதர்லாந்தை 5-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றது இந்திய அணி.

இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் பங்கேற்கும் புரோ ஹாக்கித் தொடர் தொடங்கியுள்ளது. இது ஆண்களுக்கான போட்டித் தொடராகும். தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

வருகின்ற ஜுன் மாதம் 28ம் தேதி வரை ஒவ்வொரு நாட்டின் சொந்த மண்ணிலும் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா இருமுறை மோதும்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் வலிமையான நெதர்லாந்தை சந்தித்தது. முதல் பாதி ஆட்டம் 2-2 என்று சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது பாதியில் வீறுகொண்டு எழுந்த இந்திய வீரர்கள், 3 கோல்களை அடித்தனர்.

நெதர்லாந்து அணியால் இரண்டாவது பாதியில் சோபிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 5-2 என்ற கோல்கணக்கில் வென்றது.