யு-19 ஆசிய கோப்பையை 6வது முறையாக வென்று இந்திய அணி சாதனை

19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 6வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. இளம் வீரர் ஹர்ஸ் தியோகி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். \

asia

U-19 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபால், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றன. இந்த தொடரின் லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணிகள் அனைத்து சுற்றுகளிலும் முன்னேறி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்தியா மற்றும் இலங்கை மோதும் இறுதிப் போட்டி டாக்காவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் வீரர்களான யாசஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்களும், அனூஜ் ராவத் 57ரன்களும், தேவ்தத் பதக்கால் 31 ரன்களும், கேப்டன் பிரப்சிம்ரன் சிங் 65 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.

305 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் நிஷான் மதுஷ்கா 49, பாசிந்து சூயியபந்தாரா 31, நவோத் பரணவிதானம் 48 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.

இந்திய பவுலர் ஹர்ஸ் தியோகி 10 ஓவரில் 38 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சித்தார்த் தேசாய் 2 மற்றும் மோஹித் ஜங்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அண்மையில் இந்திய சீனியர் அணி ஆசிய கோப்பையை வென்றது. இந்நிலையில் நடப்பு உலக சாம்பியனான இளம் இந்திய அணி 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதித்துள்ளது.