முத்தரப்பு பெண்கள் கால்பந்து – இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

மும்பை: முத்தரப்பு பெண்கள் கால்பந்து தொடரில்(17 வயதுக்கானோர்) இந்திய அணி, தாய்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

பெண்களுக்கான ‘ஃபிஃபா’ உலகக்கோப்பை(17 வயதுக்கானோர்) கால்பந்து போட்டி அடுத்தாண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. நவம்பர் 2 முதல் 21ம் தேதி வரை இப்போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா, ஸ்வீடன் மற்றும் தாய்லாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்(17 வயது பெண்களுக்கான) திட்டமிடப்பட்டது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி ஸ்வீடனிடம் வீழ்ந்திருந்தது.

இரண்டாவது போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. முதல் பாதியில் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் இந்திய அணி ஒரு கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ஸ்வீடன் அணியை மீண்டும் சந்திக்கிறது.