மேற்கிந்திய தீவுகளை 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டிஎல்எஸ் அடிப்படையில், 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி நிர்ணயித்த 279 ரன்கள் இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகளுக்கு, மழை காரணமாக 46 ஓவர்களில் 270 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 42 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது மேற்கிந்திய தீவுகள்.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தவான் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, களமிறங்கினார் கேப்டன் விராத் கோலி. பின்னர் ரோகித் ஷர்மாவும் 18 ரன்களில் நடையைக் கட்ட, கோலி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் 125 பந்துகளில் 120 ரன்களை குவித்து மற்றொரு சதமடித்தார். இதனுடன் சேர்த்து அவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 42 சதங்களை அடித்துள்ளார். இதன்மூலம் டெண்டுல்கரின் சாதனையை விரைவாக நெருங்கி வருகிறார்.

‍கோலிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த ஷ்ரேயாஸ், 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில் வழக்கம்போல சொதப்பினார். 24 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். எவின் லிவிஸ் 65 ரன்களும், பூரான் 42 ரன்களும் அடித்தனர். ‍வேறு யாரும் சோபிக்கவில்லை.

இடையில் மழை குறுக்கிட்டதால், 46 ஓவர்களில் 270 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 42 ஓவர்களிலேயே 210 ரன்களுக்கு அந்த அணியின் கதை முடிவுக்கு வந்தது.

இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் அசத்தினார். அவர் தன் கணக்கில் 4 விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டார். ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டனர்.