டெல்லி :

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா போராடிவரும் வேலையில், இன்று ஒரே நாளில் 9,846 பேருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் 366 பேர் மரணமடைந்த நிலையில், உலக அளவில் பிரிட்டனின் 2,91,409 பாதிப்புகளை தாண்டி, மோசமான பாதிப்புக்குள்ளான நான்காவது நாடாக இந்தியா மாறியிருக்கிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடிப்படையில் இந்தியா இப்போது அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 20,71,489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,15,291 பேர் மரணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 75,15,332 ஆக உள்ளது, இதுவரை 4,20,493 பேர் இறந்துள்ளனர்.

“இந்தியா சமுதாய பரவல் நிலையில் இல்லை. சோதனை, தடமறிதல், கண்காணிப்பு, தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாம் தொடர வேண்டும்; இவற்றில் நமது பாதுகாப்பை நாம் விட்டுவிடக்கூடாது,” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கூறினார்.

இருந்தபோதும், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்தில் இருந்து 3 லட்சத்திற்கு பத்தே நாட்களில் சென்றது கண்டு கிடுகிடுவென நான்கே மணி நேரத்தில் மொத்த இந்தியாவையும் பூட்டிய போது மக்களுக்கு ஏற்படாத அச்சம், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பின் இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை கண்டு அச்சத்தில் உள்ளனர் என்றே கூறவேண்டும்.