லண்டன்:

அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தை முந்தி சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 5வது இடம் பிடிக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் துணை தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் கூறுகையில், ‘‘ தற்காலிக பின்னடைவை கடந்து இந்திய பொருளாதாரம் டாலர் மதிப்பின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ் பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரம் முந்தும். இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 5வது இடம் பிடிக்கும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி தற்காலிக சரிவை சந்தித்தது. 2032ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தை முந்தி சீனா முதலிடம் பிடிக்கும். சில வருடங்களில் பிரான்ஸ் பொருளாதாரம், பிரிட்டனை முந்தும்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்பு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். அந்நாட்டு பொருளாதாரம் 2020ம் ஆண்டில் பிரான்சை மீண்டும் முந்தும்’’ என்றார்.