இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு இந்தியா புறக்கணித்ததின் எதிரொலியாக  ரத்து செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிகிறது.
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.
saark480
நவம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது.
இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கும் அரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதனிடையே, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இந்த தகவல் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய அரசின்சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவை தொடர்ந்து, பூடான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மொத்தமுள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்க் மாநாட்டின் நடைமுறைப்படி அமைப்பில் உள்ள ஒரு நாடு கலந்து கொள்ளவில்லை என்றாலும், நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இருப்பினும், நியூயாக்கில் இருக்கும் சார்க் அமைப்பின் பொது செயலாளர் பகதூர் தபா நேபாளம் திரும்பியதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இந்தியா இல்லை என்றால் நாங்களும் கலந்து கொள்ள மாட்டோம் என்று இலங்கையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.