இந்தியாவில் மதசார்பின்மை வலுவடைந்தால் 30 ஆண்டில் தனி நபர் வருமானம் இரட்டிப்பாகும்…..ஆய்வில் தகவல்

டில்லி:

20ம் நூற்றாண்டில் பொருளாதார மாற்றத்தில் மதம் ஏற்படுத்திய மாற்றம் என்பது குறித்த ஆய்வு கட்டுரை சயின்ஸ் அட்வான்ஸஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா ஸ்பெண்ட்ஸ் என்ற இந்த சர்வே வேர்ல்டு வேல்யூஸ் சர்வேயில் உள்ள தகவல்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொருளாதார முன்னேற்றத்தை மதசார்பின்மை முந்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதசார்பின்மையில் 109 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 66வது இடத்தில் உள்ளது. சீனா முதல் இடத்திலும், பாகிஸ்தான் 99வது இடத்திலும், பங்களாதேஷ் 104வது இடத்திலும், கானா கடைசி இடத்திலும், ஜெர்மனி 6வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவின் தனி நபர் வருமானம், நாட்டின் மொத்த உற்பத்தி கடந்த 1958ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 26 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியர்கள் தங்களது மதம் மீதான கண்ணோட்டத்தின் திடத்தை குறைத்தால் இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு ஐரோப்பா நாடுகளான ஜெர்மனியின் மதசார்பின்மை அளவை இந்தியா அடைந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.70,175 அதிகரிக்கும். 20 ஆண்டுகளில் 1,96,490 என்றும், 30 ஆண்டுகளில் ரூ.3,50,875 ஆக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத நம்பிக்கை, ஜாதி மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை குறைத்துக் கொண்டால் தனி நபர் வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சி 30 ஆண்டுகளிலேயே எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.