இந்தியாவால் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் : பில் கேட்ஸ் உறுதி

வாஷிங்டன்

ந்தியாவின் மருந்து தொழிற்சாலைகளால் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தனது நண்பருடன் சேர்ந்து அமைத்து தற்போது ஓய்வில் உள்ளார்   இவர் தற்போது சமூகப் பணிகளில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.  மேலும் தன்னுடைய மற்றும் மனைவியில் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை மூலம் அவர் பல நற்பணிகளைச் செய்து வருகிறார்.

நாளை டிஸ்கவரி சேனலில் வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போர் என்னும் ஆவணப்படத்தில் பில் கேட்ஸ் தோன்றுகிறர்.  அவர் இந்த ஆவணப்படத்தில் தற்போது இந்தியா சந்தித்து வரும் சுகாதாரக் கேடு மற்றும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தொற்று குறித்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

பில்கேட்ஸ், “இந்தியாவில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. உலகம் முழுவதும் மருந்துகளும் தடுப்பூசிகளும் அதிக அளவில் இந்தியாவில் இருந்து வருகின்றன.   மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக அளவில் தடுப்பூசிகள் த்யரிக்கப்படுகின்றன.  அதற்கான செரம் இன்ஸ்டிடியூட் போன்ற மிகப் பெரிய தொழிலகங்களும் இந்தியாவில் உள்ளன.

இங்கு பயோ இ, பரத் பயோடெக் உள்ளிட்ட பலநிறுவனங்கள் உள்ளன.  அவர்கள் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்து உலகுக்கு உதவ கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.  ஏற்கனவே பல நோய்களுக்கு அவர்கள் தடுப்பு மருந்து உருவாக்கி வருகின்றனர்.  இந்தியாவில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் உலக நாடுகள் அனைத்துக்காகவும் உருவாக்கப்படுகின்றன.

தற்போது இந்தியா இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் தொடக்க நிலையில் உள்ளது.   மக்களின் நடமாட்டத்தைக் குறைத்தால் வைரஸ் தொற்றும் வெகுவாக குறையும்.  எனது அறக்கட்டளை இந்தியாவுடன் இணைந்து பயோ டெக்னாலஜி துறையில் ஐசிஎம்ஆர் உள்ளிட்ட அமைப்புக்களின் வழிகாட்டுதலுடன் பல நற்பணிகளைச் செய்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.