Random image

‘இந்தியா ஒன்றும் வடகொரியா அல்ல’! அமித்ஷாவுக்கு காங்கிரஸ் காட்டமான பதில்

டில்லி:

பாரதியஜனதா ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வதிகார வடகொரியா நாடு அல்ல என்று  பாஜ தலைவர் அமித்ஷாவுக்கு அகில இந்திய  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா பதில் தெரிவித்துள்ளார்!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா

கடந்த செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டில்லியில் நடைப்பெற்றது. அதில் பேசிய அமித்ஷா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெறும் என்றும் அடுத்த 50 ஆண்டிற்கு பாஜக-வின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அமித்ஷாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் அமித்ஷா கனவுலகில் வாழ்கிறார் எனறு நக்கல் செய்தன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா அமித்ஷாவுக்கு காட்டமாக பதில் அளித்தார்.

“ஜனநாயகம் அற்ற முறையில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய நினைக்கும் பாஜக-விற்கு செல்லிக்கொள்ள விரும்புவது என்ன வென்றால்… வடகொரியா போன்று ஒரே ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வதிகார நாடு இல்லை” என்று கூறினார்.

வடகொரியாவை போல் இந்தியாவை சர்வாதிகார ஆட்சிக்குள் கொண்டுவர  நினைக்கும் பாஜக கனவு பலிக்காது. இந்திய மக்கள் விழிப்புணர்வு கொண்ட மக்கள். விரைவில் இந்திய மக்கள் பாஜக ஆட்சியை தூக்கியெறிவார்கள். வரும் 2019-ஆப் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.