கிருஷ்ண காதி, காஷ்மீர்

காஷ்மீர் மாநில எல்லைப்புறங்களில் உள்ள பொதுமக்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ரானுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலை ஒட்டி இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதை ஒட்டி பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய போது விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு பாகிஸ்தான் படைகள் எல்லை தாண்டி இந்தியாவை  தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர். இதை ஒட்டி எல்லை பகுதிகளான கிருஷ்ண காதி சுந்தர்பானி ஆகிய பகுதிகளில் இந்திய பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் முகாமிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஆசிஃப் கஃபூர் சமீபத்தில், “இரு நாடுகளும் தற்போது போருக்கு மிக அருகில் உள்ளன. எங்கள் ராணுவத்தினர் தற்போது பயங்கரவாதத்துக்கு எதிராகவும் பொது மக்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். விங் கமாண்டார் அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்து தாங்கள் அமைதி வழியை விரும்புவதை காட்டி விட்டது. இனி இந்தியாதான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து எல்லை தாண்டி பொதுமகக்ளை தாக்குவது இந்திய ராணுவத்தினருக்கு அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர், “அமைதியை நாடுவதாக சொல்லும் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையை தாண்டி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஏற்படும் பின் விளைவுகளை பாகிஸ்தானால் தாங்கிக் கொல்ள முடியாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.