சீன பிரதிநிதிகளுக்கு இந்திய அரசு விசா வழங்காததால் சீன வர்த்தகக் குழுக் கூட்டம் ரத்து

டில்லி

இந்திய அரசு சீன பிரதிநிதிகளுக்கு விசா வழங்காததால் இந்தியச் சீன வர்த்தக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்தது.   அந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.   அத்துடன் இரு தரப்பில் இருந்தும் உயர் மட்ட அதிகாரிகள் பங்கு பெறும் வர்த்தக மேபாட்டுக் கூட்டங்கள் நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

இந்திய சீன வர்த்தகக் கூட்டம் ஒவ்வொரு வருடமும் ஒரு இந்திய நகரில் நடப்பது வழக்கமாகும்.   சென்ற வருடம் இந்தக் கூட்டம் மகாராஷ்டிர மாநில அரசால் புனே நகரில் நடத்தப்பட்டது.    அதற்கு முன் வருடம் கர்நாடக அரசால் பெங்களூரு நகரில் நடத்தப்பட்டது.   இந்த வருடம் டில்லியில் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.  இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதாக இருந்த 70 சீனப் பிரதிநிதிகள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.    அவர்களுக்கு இந்திய அரசு விசா வழஙகவில்லை.  இதையொட்டி இந்த கூட்டத்தை நடத்த உள்ள அதிகாரிகள் அரசிடம் உடனடியாக சீன அதிகாரிகளுக்கு விசா அளிக்க வேண்டுமென அழுத்தம் அளித்துள்ளனர்.  ஆனால் அரசு விசா அளிக்க மறுத்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி இந்த கூட்ட அமைப்பாளர்களான சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்புக் குழு திட்டமிட்டபடி சந்திப்பு நிகழாது என தங்கள் இணைய தளம் மூலம் தெரிவித்துள்ளது.  அத்துடன் மீண்டும் இந்த கூட்டம் விரைவில் நடை பெறும் எனத் தெரிவித்த போதிலும் சரியான தேதி மற்றும் நேரம் குறித்தும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.