இந்தியா- சீனா இடையே நடைபெற்ற 8வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியா? பாதுகாப்புத்துறை அறிக்கை

டெல்லி:  இந்திய –சீன  ராணுவ பிரதிநிதிகளுக்கு இடையே   நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைக்கோட்டுப்பகுதி மோதலைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற பரபரப்புடன் இரு நாடுகளும் ராணுவ வீரர்களையும், போர் தளவாடங்கைளயும் குவித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து, இரு நாட்டு ராணுவத்தினர் சார்பில், பதற்றத்ரதை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று  முடிந்தும், இருநாட்டு ராணுவப் பிரதிநிதிகளுக்குமிடையே 8வது கட்ட பேச்சுவார்த்தை (நவம்பர் 6ந்தேதி)   நடைபெற்றது. இந்தியா சார்பில் ராணுவ உயர் மட்ட அலுவலர் பிஜிகே மேனன் தலைமையில் இந்தியப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் சுசுல் கிராமத்தில் நடைபெற்றது. இதில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், தொடர்ந்து அமைதியான வழியில் தீர்வுகாண தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது..

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையிலும் பிரச்னைகளை தீர்க்கும் வண்ணம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் மேற்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இரு நாடுகளும் மேற்கொண்டன.

இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் தலைவர்கள் எட்டிய தீர்வினை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். விரைவாகவே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியிலேயே நிலை நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.