லடாக்கில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளியா? இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை

டெல்லி: லடாக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் – மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஆக்கப்பூர்வமான முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. 2017ல் கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை எழுந்துள்ளது. பின்னர் இரு  நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன.

இந் நிலையில் தற்போது லடாக்கில் மீண்டும் எல்லை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா, சீனா நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

20 ஆண்டு காலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் அதை ஏற்க இந்தியா நிராகரித்துவிட்டது.