எல்லை பிரச்சினை: இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

டெல்லி:

டாக் எல்லையில்  இரு நாட்டு ராணுவங்களும் ஆயுதங்களை குவித்து வரும் நிலையில், இன்று  இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சிரனைக்கு இன்று தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா சீனா இடையே ஏற்கனவே டோக்லாம் பிரச்சினை ஏற்பட்டது. சீனாவின் ஊடுருவலை 73 நாட்கள் எதிர்கொண்டு நின்று முறியடித்தது இந்தியா. இதனால் டோக்லாமை கைப்பற்றிவிடலாம் என்கிற சீனாவின் கனவு தகர்ந்தது.

தற்போது காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாங்கோங் டிசோ, தவுலவத் பெக் ஓல்டி மற்றும் கால்வன் பள்ளத்தாக்கு பகுதிகளை சீனா குறி வைத்துள்ளது.  கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த பகுதி சொந்தமானது என்று ஏற்கனவே சீனாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிதான்.  இருந்தாலும் சீன வீரர்கள் அந்த பகுதிகளுக்குள்ளே ஊடுருவி பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு லடாக்கின் பங்கோங் ஏரி பிராந்தியத்தில் கடந்த மாதம்  மே 5 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில்  இரு தரப்பு வீரர்களிடையே மோதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியானது. அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான தற்போதைய பதற்றம்  கவனத்திற்கு வந்தது.

இந்த மோதல்களுக்குப் பின்னர், தெற்கே டெமொக், உயரமான பாங்கோங் ஏரியின் கிழக்குக் கரையில் உள்ள விரல்கள் பகுதி, கால்வான் நதிப் படுகை மற்றும் சமீபத்தில் கோக்ரா பதவி உள்ளிட்ட பகுதிகளில் சீன காலாட்படை வீரர்கள் ஊடுருவியதாக பல தகவல்கள் வந்துள்ளன. தவுலத் பேக் ஓல்டி பகுதியை நோக்கி வடக்கே சீன செயல்பாடு அதிகரித்ததாக சில தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த பிரச்சினை தீவிரமாகி வருவதால், இரு நாட்டு ராணுவ துருப்புகளும் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர்  பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

எல்லை பகுதியில் அமைந்திருக்கும்  கிராமமான சுஷுல் – மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சீனா இடையே உள்ள சுமார் 3500 கி.மீட்டர் தூரத்துக்கான எல்லை பிரச்சினை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதற்கிடையில்,  இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியாவும், சீனாவும் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.