கொழும்பு: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை தொடரின் எட்டாவது சீஸன் இலங்கையில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்தார் இந்திய அணியின் கேப்டன் துருவ் ஜூரெல்.

ஆனால், இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. அணியின் வீரர்கள் பலரும் ஒன்றை இலக்கம் அல்லது டக் அவுட் ஆக, கேப்டன் துருவ் 33 ரன்களும், கரண் லால் 37 ரன்களும் அடித்து மானத்தைக் காத்தனர். இறுதியில், வெறும் 32.4 ஓவர்களிலேயே 106 ரன்களுக்கெல்லாம் இந்திய அணியின் ஆட்டம் முடிந்தது.

வங்கதேசம் இந்தமுறை கோப்பையை எளிதாக வென்றுவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் வேறுவிதமான அனுபவத்தை தந்தனர். இந்திய அணியில் ஆகாஷ் சிங் மற்றும் அதர்வா ஆகியோர் வங்கதேசத்தை படுத்தி எடுத்தனர்.

கேப்டன் அக்பர் அலி 23 ரன்களும், மிரித்துன்ஜாய் சவுத்ரி 21 ரன்களும் எடுத்ததுதான் அந்த அணிக்கான அதிகபட்ச பங்களிப்பு. இறுதியில், 33 ஓவர்கள் வரை களத்தில் நின்ற வங்கதேச அணி, வெறும் 107 ரன்களை எடுக்க முடியாமல், 101 ரன்களுக்கெல்லாம் சரணடைந்துவிட்டது.

இந்தியா சார்பாக அதர்வா 5 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன்மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாதான் இத்தொடரில் அதிகமுறை கோப்பை வென்ற அணியாக திகழ்கிறது.