நியூயார்க்: அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.

இந்தாண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணாக்கர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்வதாக அந்தப் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

அந்தப் புள்ளிவிபரத்தின்படி; அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டுகிறது.

இதன்மூலம் அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்திற்கு ரூ.3.2 லட்சம் கோடி நிதி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டைக் காட்டிலும் 5.5% ஆகும்.

இந்த விஷயத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே சீனாதான் முதலிடம் பெறுகிறது. 2018-19 கல்வியாண்டில் மட்டும் 3.69 லட்சம் சீன மாணாக்கர்கள் அங்கு கல்வி பயில்கின்றனராம். இந்தியா இந்த விஷயத்தில் இரண்டாமிடம் வகிக்கிறது. இந்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2.02 லட்சம்.

இந்த வகையில், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணாக்கர் எண்ணிக்கையில் இந்தியா & சீனா ஆகிய நாடுகள் மட்டும் 50% பங்கைப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.