டெல்லி: இந்தியா தான் அடுத்த கொரோனா வைரஸ் பரவல் மையமாக இருக்கும், 60 சதவீதம் பேர் பாதிக்கப்படுவர் என்றும் நோய் இயக்கவியல் மைய இயக்குநர் ரமணன் லட்சுமிநாராயணன் கூறி இருக்கிறார்.

தி வயர் என்ற ஆங்கில இணையதளத்துக்கு அவர் 50 நிமிடங்கள் பேட்டி அளித்த போது இதை கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவின் மதிப்பீடுகளை பார்த்தோமானால், மக்கள் தொகையில் 20% -60% நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

மிக மோசமான சூழ்நிலையில், இந்திய மக்கள் தொகையில் 60% பேர் பாதிக்கப்படலாம். இருப்பினும், பெரும்பான்மையானவர்கள் லேசாக பாதிக்கப்படுவார்கள். மிகச் சிறிய சதவிகிதத்தினர் தீவிரமாக நோய்வாய்ப்படுவார்கள், இன்னும் சிறிய சதவிகிதத்தினர் தங்கள் உயிரை இழப்பார்கள்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை நம்புவது கடினம். இந்தியாவில் 130 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் குணமடைந்து விட்டனர். 3 பேர் பலியாகி இருக்கின்றனர்.

அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பை அந்நாடு குறைத்து மதிப்பிட்டு விட்டது. அங்கு 1500க்கும் மேற்பட்ட கண்டறியப்படாத நோயாளிகள் உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் அதன் அடர்த்தி ஆகியவற்சை கணக்கிடுகையில் 10000 அல்லது அதற்கு மேற்பட்ட கண்டறியப்படாத கொரோனா நோயாளிகள் இருக்கலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புள்ளிவிவரங்களை ஏற்க முடியாது. இந்தியா இன்னும் தொற்றுநோயின் 2ம் கட்டத்தில் உள்ளதும், 3ம் கட்டத்திற்குள் நுழையவில்லை. 2 அல்லது 3 வாரங்களுக்குள் 3ம் கட்டத்திற்குள் நுழையலாம்.

உலகின் பிற பகுதிகளில் கிடைத்த முன் அனுபவத்தின் அடிப்படையில் இதை நான் சொல்கிறேன். பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை மூடுவது என அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நீங்கள் பார்த்தால், நாம் 3ம் கட்டத்தில் இருக்கிறோம் என்பது அரசுக்கு தெரியும் என்பதை தெளிவாக கூறுகிறது. இது விவாதிக்கக்கூடிய விஷயம் என்றாலும், அரசு அதனை விரும்பவில்லை.

இந்தியா தனது பரிசோதனையை கடுமையாக அதிகரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10,000 பேரை சோதிக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, ஐசிஎம்ஆர் புள்ளிவிவரப்படி, மார்ச் 17 மாலை 5 மணி நிலவரப்படி இந்தியா மொத்தம் 11,500 பேரை மட்டுமே சோதனை செய்திருக்கிறது.

நான்கு முதல் எட்டு மில்லியன் மக்களுக்கு ஐசியு சிகிச்சை தேவைப்படலாம். அப்படி ஒருவேளை நடக்குமானால், இந்தியா அவசரமாக ஐசியு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பல வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டும்.

உங்களுக்கு சளி, இருமல் அல்லது காய்ச்சல் அல்லது சுவாசக் கோளாறு இருந்தால், உடனடியாக ஒரு வாரமாவது வீட்டில் இருக்க வேண்டும். சுமார் 4 நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் நீடித்தால், நீங்களே பரிசோதனை செய்ய வேண்டும். இருப்பினும், உடனடி சோதனைக்கு விரைந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டால், மீதமுள்ள குடும்பத்தினர் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக உணவு பரிமாற அவரது அறைக்கு நுழையக்கூடாது என்று அர்த்தமல்ல. அவர்கள் உண்மையில் தட்டை 2 அடி தூரத்தில் வைத்து விடலாம். அத்தகைய நபர் அல்லது அவர்களின் ஆடைகளை நீங்கள் கழுவலாம், கையுறைகள் அணிய வேண்டிய அவசியமில்லை. வெறுமனே உங்கள் கைகளை முழுமையாகவும் அடிக்கடி கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை போதுமானது.

இங்கே முகமூடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை. தேவையில்லாமல் அணிந்த முகமூடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தன. நோய்த்தொற்று இல்லாத எஞ்சியவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

கோமியத்தை குடிக்க வேண்டும் என்பதற்கான எந்த அறிவியல் முகாந்திரமும் இல்லை. எந்த ஹோமியாபதி மருந்துக்கும் அடிப்படை அறிவியல் உண்மை இல்லை என்றார்.