டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போதைய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 64 லட்சத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்பும் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவை சூறையாடி வருகிறது. தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது.  தொற்று பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு பிறகு கொரோனா மரணங்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.  நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இதற்கிடையில், கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து பல கட்டமாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சில பகுதிகளில் மீண்டும் தொற்று பரவல் உயர்த் தொடங்கி உள்ளது.  மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்பட பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை  64,76,949 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 9,47,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 54, 27,403 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 100,903 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.78 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு தொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தரவுகள் (டேட்டா) வெளியாகி உள்ளது.

இந்தியா முழுக்க கொரோனாவின் வீரியம் குறையவில்லை, தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு  செப்டம்பர் மாதம்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளது.   நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,100 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா. நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரா மாநிலம் செல்வந்தர்கள் அதிகம் பேர் வசிக்கும் மாநிலம். இங்கு  இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பரில் நாள் ஒன்றுக்கு  குறைந்த பட்சம் 300ல் இருந்து  அதிகப்ட்சம் 500 பேர் தினமும்  உயிரிழந்தனர். அதிகம் பேர் உயிரிழந்தது மும்பையில்தான், அதைத்தொடர்ந்து, புனே இரண்டாவது இடத்தில் உள்ளது.  இந்தியாவில் அதிக கொரோனா உயிரிழப்புகள் பதிவான முதல் 10 மாவட்டங்களில், மும்பை மற்றும் புனே உள்பட 5 மாவட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேரந்தவை.

கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மற்ற பகுதிகளில் இருந்து மும்பைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தொற்று பரவலை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதை,  மும்பையின் பிரபல மருத்துவர் ஒளர்னாப் கோஷ் ஆமோதித்துள்ளார். இவர்  புனே மக்களிடையே ஆண்டிபாடிக்கள் சோதனை நடத்திய குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு   கொரோனா உயிரிழப்பு விகிதம் 3%ஆக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரியைவிட இருமடங்கு அதிகமாகும். நாட்டிலேயே பஞ்சாபின் உயிரிழப்பு விகிதம்தான் அதிகம் என்கிறார் கொரோனா பரவலை  கண்காணிக்கும் ப்ரூகின்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் ஷமிகா ரவி. உயிரிழப்பு அதிகரிப்பது,  ஆபத்தான சூழல் என எச்சரிக்கும், ஷமிகா ரவி,  ந்தியாவின் மற்ற பகுதிகளோடு பஞ்சாப் முரண்படுகிறது என்று கூறுகிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 6.2%ஆக இருக்கிறது. இது மகாராஷ்டிராவை (24%) விட குறைவு. ஆனால் பிஹார் (2.5%) அல்லது ஜார்கண்ட் (3.7%) ஆகிய மாநிலங்களை விட அதிகம். இந்த மாநிலங்களில்,   10 லட்சத்தில் 60,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இருந்தாலும் மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில்தான் உயிரிழப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார். கொரோனா பரிசோதனை செய்வதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாததே, கொரோனா உயிரிழப்புக்கு அதிக காரணம் என்று கூறுகிறார்  மருத்துவர் மேனன்.

சமீபத்தில்,  ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு கொரோனா நோயாளி மருத்துவமனையில் சேர்வதில் இருந்து உயிரிழப்பு வரையிலான இடைவெளி சராசரியாக 13 நாட்கள் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பரிசோதனை விகிதம் அதிமாக இருக்கிறது. உயிரிழப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள மேனன், மற்ற மாநிலங்களும் சோதனைகளை அதிகப்படுத்தி, உயிரிழப்புகளை தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்திஉள்ளார்.

 தமிழகத்தில் கொரோனாவால் 9,000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், ஜூலை மாதம் முதல் தினசரி உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த சுமார் 80 சதவீதத்தினர் நகர்ப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதில் பல்லேறு மாவட்டங்களின் சராசரி உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதிகமாக உள்ள மக்கள், மக்களின் மெத்தனமானப் போக்கு, சமூக இடைவெளி, முக்கவசம் அணியாது போன்றவற்றால், பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உயிரிழப்பு குறைவு என்றும்,  கிராமப்புற மாவட்டங்களில் இருப்பவர்ககள் இணை நோய்களின் தாக்குதல் இல்லாததால், அவர்களால் எளிதில் தொற்று பாதிப்பில் இருந்து வெளியேற முடிகிறத, அதனால் உயிரிழப்பும்  தடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா இன்னும் தொற்று பரவல் காலத்தில் இருந்து வெளியே வரவில்லை என்று என்று எச்சரிக்கும் ஆய்வாளர்கள்,  தற்போதைய நிலையில், “டெல்லி, மகாராஷ்டிரா  போன்ற சில மாநிலங்கள் மோசமான நாட்களை கடந்திருக்கலாம். ஆனால், மற்ற மாநிலங்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது”  என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன்,  தொற்று பரவல்  ஒவ்வொரு மாநிலதிலும் வித்தியாமான அளவில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பெருந்தொற்று,  பிகார் போன்ற ஏழை மாநிலங்களில் முதலில் பரவியிருந்தால், அது இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும், ஆனால், அதிர்ஷ்டவசமாக மகாராஷ்டிரா போன்ற பணக்கார மாநிலங்களில் முதலில் பரவியதால், அவைகளால் தாக்குப்பிடிக்க முடிந்தது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.